நகையை வழிப்பறி செய்த வழக்கில் வாலிபர், நண்பருடன் கைது


நகையை வழிப்பறி செய்த வழக்கில் வாலிபர், நண்பருடன் கைது
x
தினத்தந்தி 15 Aug 2018 4:00 AM IST (Updated: 15 Aug 2018 3:35 AM IST)
t-max-icont-min-icon

பெரியம்மா நகையை வழிப்பறி செய்த வழக்கில் வாலிபர், நண்பருடன் கைது செய்யப்பட்டார்.

ஓமலூர்,

சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த காடையாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் அலமேலு (வயது 55). இவருடைய தங்கை கோதாவரி (45). 2 பேரும் சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலுக்கு கடந்த 12-ந்தேதி சென்றுவிட்டு இரவு 9 மணிக்கு தீவட்டிப்பட்டி வந்தனர். அங்கிருந்து காடையாம்பட்டிக்கு கோதாவரியின் மகன் அருள்மணியின் (21) மோட்டார் சைக்கிளில் அலமேலுவும், கோதாவரியும் சென்றனர். காடையாம்பட்டி அருகே சென்றதும் அலமேலுவை அங்கு இறக்கி விட்டனர். அலமேலு வீட்டுக்கு சென்று கொண்டிருந்தபோது மரவள்ளிகிழங்கு தோட்டத்தில் மறைந்திருந்தவர் அலமேலுவின் கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் சங்கிலியை வழிப்பறி செய்து சென்றார்.

இதுபற்றி தீவட்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். போலீசார் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அலமேலுவின் தங்கை கோதாவரியின் மகன் அருள்மணி, தனது நண்பர் தீவட்டிப்பட்டியைச் சேர்ந்த சரவணன் (23) என்பவருடன் சேர்ந்து திட்டம் தீட்டி தன் பெரியம்மா தனியாக செல்லும்போது சரவணனை வைத்து நகையை பறித்தது தெரிய வந்தது. இதனையடுத்து அருள்மணி, சரவணன் ஆகிய 2 பேரையும் தீவட்டிப்பட்டி போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து நகையை மீட்டனர். கைதான 2 பேரும் ஓமலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Next Story