மங்களூரு சந்திப்பு ரெயில் நிலையத்தில் தீவிர சோதனை


மங்களூரு சந்திப்பு ரெயில் நிலையத்தில் தீவிர சோதனை
x
தினத்தந்தி 15 Aug 2018 4:16 AM IST (Updated: 15 Aug 2018 4:16 AM IST)
t-max-icont-min-icon

சுதந்திர தினத்தையொட்டி நேற்று மங்களூரு சந்திப்பு ரெயில் நிலையத்தில் தீவிர சோதனை நடத்தப்பட்டது.

மங்களூரு,

இந்தியா முழுவதும் இன்று (புதன்கிழமை) சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. இந்த சுதந்திர தினத்துக்கு பயங்கரவாத தாக்குதல் அச்சுறுத்தல் இருப்பதால், நாடு முழுவதும் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் முக்கியமான நகரங்களில் சுதந்திர தினத்தன்று பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனால், நாடு முழுவதும் கடந்த சில தினங்களாக தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதேபோல, மங்களூரு சந்திப்பு ரெயில் நிலையத்திலும் நேற்று ரெயில்வே போலீசார் தீவிர சோதனை நடத்தினார்கள்.

மங்களூரு சந்திப்பு ரெயில் நிலையத்தில் நேற்று ரெயில்வே அதிகாரிகள் மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அவர்கள் 1, 2, 3 நடைமேடைகள், பயணிகள் தங்கும் அறை, வாகன நிறுத்தும் இடம், பார்சல் அலுவலகம் உள்பட மங்களூரு சந்திப்பு ரெயில் நிலையத்தில் அங்குலம், அங்குலமாக சோதனை நடத்தினார்கள்.

இதுகுறித்து ரெயில்வே போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், சுதந்திர தினத்தன்று பயங்கரவாத அச்சுறுத்தல் இருப்பதால் இந்த சோதனை நடந்தது. இந்த சோதனை வழக்கமான ஒன்று தான். பயங்கரவாதிகளிடம் இருந்து மங்களூருவுக்கு எந்த மிரட்டலும் வரவில்லை என்றார்.

Next Story