கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத்தொகையை உடனே வழங்க வேண்டும்
கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத்தொகையை உடனே வழங்க வேண்டும் என்று தே.மு.தி.க. நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்ட தேசிய முற்போக்கு திராவிட கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் விழுப்புரத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு முன்னாள் எம்.எல்.ஏ.வும், மாவட்ட செயலாளருமான எல்.வெங்கடேசன் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். மாவட்ட அவைத்தலைவர் கோவி.முருகன், பொருளாளர்கள் கருணாகரன், தயாநிதி, மாநில விஜயகாந்த் மன்ற துணை செயலாளர் ராஜசந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், வருகிற 25-ந் தேதி தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் பிறந்த நாளை விழுப்புரம் மாவட்டத்தில் அனைத்து கிராம, நகர பகுதிகளில் கட்சி கொடியேற்றி வைத்து ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடுவது, கோவில் சிலை திருட்டு வழக்குகளை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கும் முடிவை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும், கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத்தொகையை உடனே வழங்க வேண்டும், விழுப்புரம்- சென்னை நெடுஞ்சாலையில் கட்டப்பட்டு வரும் ரெயில்வே மேம்பால பணியை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு திறக்க வேண்டும், இல்லையெனில் செப்டம்பர் மாதத்தில் தே.மு.தி.க. சார்பில் சாலை மறியல் போராட்டம் நடத்துவது என்பன போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் மாவட்ட துணை செயலாளர்கள் சூடாமணி, சுந்தரேசன், அண்ணாத்துரை, வசந்தா, ஒன்றிய செயலாளர்கள் ராமலிங்கம், ஜெயமூர்த்தி, நகர செயலாளர் மணிகண்டன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் ஜெயசீலன், பிரகாஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story