தீயணைப்பு வாகனம் மரத்தில் மோதி கவிழ்ந்தது; 5 பேர் படுகாயம்
உளுந்தூர்பேட்டையில் தீயணைப்பு வாகனம் மரத்தில் மோதி கவிழ்ந்த விபத்தில் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
உளுந்தூர்பேட்டை,
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பாதூர் கிராமத்தை சேர்ந்த ஒருவரது கூரை வீடு நேற்று தீப்பிடித்து எரிந்தது. இதுபற்றி அறிந்த உளுந்தூர்பேட்டை தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். பின்னர் அவர்கள் தீயணைப்பு வாகனத்தில் உளுந்தூர்பேட்டை நோக்கி புறப்பட்டனர். அந்த வாகனத்தை தீயணைப்பு வீரர் சிவஞானம் ஓட்டினார்.
உளுந்தூர்பேட்டை ரெயில்வே மேம்பாலத்தை கடந்து சென்ற போது, எதிரே வந்த அரசு பஸ் ஒன்று தீயணைப்பு வாகனத்தின் மீது மோதுவது போல் வந்தது. இதில் பதறிய சிவஞானம் தீயணைப்பு வாகனத்தை சாலையின் இடதுபுறம் திருப்ப முயன்றார்.
அப்போது அவரது கட்டுப்பாட்டை இழந்த தீயணைப்பு வாகனம் தறிகெட்டு ஓடி சாலையோரம் இருந்த புளிய மரத்தில் மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் தீயணைப்பு வீரர்கள் பச்சையப்பன், சிவஞானம் உள்ளிட்ட 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்த உளுந்தூர்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, படுகாயமடைந்த தீயணைப்பு வீரர்கள் 5 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதற்கிடையே விபத்து நடந்த இடத்துக்கு கிரேன் வரவழைக்கப்பட்டு, கவிழ்ந்து கிடந்த தீயணைப்பு வாகனத்தை போலீசார் மீட்டனர்.
Related Tags :
Next Story