வயலுக்கு வைத்த மின்வேலியில் சிக்கி விவசாயி சாவு பெண் கைது


வயலுக்கு வைத்த மின்வேலியில் சிக்கி விவசாயி சாவு பெண் கைது
x
தினத்தந்தி 15 Aug 2018 5:36 AM IST (Updated: 15 Aug 2018 5:36 AM IST)
t-max-icont-min-icon

ஒடுகத்தூர் அருகே வயலுக்கு வைத்த மின்வேலியில் சிக்கி விவசாயி பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக நிலத்தின் உரிமையாளரான பெண் கைது செய்யப்பட்டார்.

அணைக்கட்டு,

வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அருகே உள்ள அக்ராவரம் கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தன். இவருக்கு சொந்தமான சுமார் 2 ஏக்கர் விவசாய நிலம் காட்டுப்பகுதியையொட்டி உள்ளது. ஆனந்தன் இறந்து விட்டதால் அவரது மனைவி ஜெக்குபாய் நிலத்தில் நெற்பயிர் வைத்துள்ளார்.

தினமும் இரவு நேரங்களில் காட்டுப்பன்றிகள், முயல், நரி போன்ற விலங்குகள் பயிர்களை அழித்து வருகின்றன. இதனால் விலங்குகள் நிலத்தில் இறங்காதவாறு நிலத்தைச் சுற்றி இரும்பு வயரால் பின்னப்பட்டு இரவு 9 மணிக்கு மேல் அதில் மின்சாரத்தை செலுத்தி விடுவார்கள். இந்த நடைமுறையை அப்பகுதி விவசாயிகள் காவல்துறைக்கு தெரியாமல் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் வழக்கம்போல் நேற்று முன்தினம் இரவு ஜெக்குபாய் நெற்பயிர் வைத்திருந்த வயலில் மின்வேலியில் மின்சாரம் செலுத்தி விட்டு வீட்டுக்கு வந்துவிட்டார்.

பீமாராவ் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் (வயது 42), பட்டதாரியான இவர் விவசாயம் செய்து வந்தார். இன்னும் திருமணமாகவில்லை. இவர் ஜெக்குபாய் நிலத்தின் வழியாக நேற்று முன்தினம் இரவு நடந்து சென்றார். அப்போது திடீரென நிலத்தில் தவறி விழுந்தார். இதில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே வெங்கடேசன் பரிதாபமாக இறந்தார்.

அதிகாலையில் மின்சாரத்தை நிறுத்த சென்ற ஜெக்குபாய், நிலத்தில் இறந்து கிடந்தவரை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து மின்சாரத்தை நிறுத்திவிட்டு, நிலத்தை சுற்றி இருந்த மின்வேலிகளை அகற்றிவிட்டு பொது மக்களுக்கு தகவல் கொடுத்தார்.

அதன்பேரில் அங்கு வந்த ஊர் பொதுமக்கள் மின்சாரம் தாக்கி வெங்கடேசன் இறந்தது குறித்து வேப்பங்குப்பம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வெங்கடேசன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிவு செய்து ஜெக்குபாயை கைது செய்தார்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story