கோவில் திருவிழாவில் சோகம்: சாமி பல்லக்கில் மின்சாரம் பாய்ந்து முதியவர் பலி


கோவில் திருவிழாவில் சோகம்: சாமி பல்லக்கில் மின்சாரம் பாய்ந்து முதியவர் பலி
x
தினத்தந்தி 15 Aug 2018 5:40 AM IST (Updated: 15 Aug 2018 5:40 AM IST)
t-max-icont-min-icon

வேலூரில் நடந்த கோவில் திருவிழாவின் போது சாமி பல்லக்கில் மின்சாரம் பாய்ந்தது. இதில் முதியவர் பலியானார். 5 பக்தர்கள் காயமடைந்தனர். இது தொடர்பாக கோவில் நிர்வாகியை போலீசார் கைது செய்தனர்.

வேலூர்,

வேலூர் கொசப்பேட்டை சுந்தரேஸ்வரர் சாமி கோவில் தெருவில் சோலாப்பூர் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக கூழ்வார்க்கும் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. வழக்கம்போல இந்த ஆண்டும் கடந்த மாதம் 29-ந் தேதி காப்புக்கட்டுதலுடன் திருவிழா தொடங்கியது.

கடந்த 12-ந் தேதி காலை 8 மணிக்கு அம்மனுக்கு மகாஅபிஷேகமும், பகல் 1 மணிக்கு கூழ்வார்த்தலும் நடைபெற்றது. நேற்று முன்தினம் இரவில் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் அம்மன் வீதி உலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு இரவு முழுவதும் அந்தப்பகுதியில் உள்ள வீதிகள் வழியாக அம்மனை பல்லக்கில் வைத்து இழுத்து வந்தனர்.

நேற்று அதிகாலை 5 மணியளவில் கோவில் அருகில் உள்ள மாசிலாமணி 2-வது தெருவில் அம்மன் வீதிஉலா வந்தபோது அங்குள்ள சிறிய பள்ளத்தில் பல்லக்கு இறங்கியது. இதனால் பல்லக்கின் ஒரு பகுதி அருகில் உள்ள மின்சார டிரான்ஸ்பார்மரில் உரசியது. இதில் பல்லக்கில் இருந்த இரும்பு கம்பி டிரான்ஸ்பார்மரில் பட்டு பல்லக்கில் மின்சாரம் பாய்ந்தது.

அப்போது பல்லக்கை பிடித்தபடி வந்த பக்தர்களை மின்சாரம் தாக்கியது. இதில் அதேபகுதியை சேர்ந்த தயாளன் (வயது 65) என்பவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

மேலும் 5 பேர் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டனர். இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த பக்தர்கள் செய்வதறியாது அலறியபடி ஓடினர். இதுபற்றி தகவல் அறிந்ததும் அந்தப்பகுதி பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் திரண்டு வந்தனர். அவர்கள் மின்சாரம் தாக்கி காயமடைந்த அதே பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் (33), முருகன் (37), சீனிவாசன் (45), சுந்தர், பரசுராமன் (50) ஆகிய 5 பேரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் தெற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் மின்சாரம் தாக்கி பலியான தயாளனின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கோட்டபொறியாளர் ஸ்டாலின் தலைமையில் மின்வாரிய அதிகாரிகள் சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்டு கோவில் நிர்வாகியிடம் விசாரணை நடத்தினர். அப்போது மின்சாரவாரியத்தில் அனுமதி பெறாமல் சாமி வீதிஉலா நடத்தியதால் மின்சாரம் துண்டிக்கப்படவில்லை என்றும், அதனால் இந்த விபத்து நடந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதே போன்று தாசில்தார் ரமேஷ் மற்றும் வருவாய்த்துறையினரும் விசாரணை நடத்தினர்.

இந்த சம்பவம் குறித்து தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவில் நிர்வாகி முத்தையா என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பல்லக்கில் மின்சாரம் பாய்ந்து பக்தர் பலியானதை தொடர்ந்து நேற்று நடக்க இருந்த ஊஞ்சல் சேவை, மஞ்சள் காப்பு, பூப்பந்தல் அலங்காரம் ஆகிய நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டு கோவிலும் பூட்டப்பட்டது. இதனால் அந்தப்பகுதியே சோகத்தில் மூழ்கியது.

Next Story