வானவில் : அனைவரையும் கவரும் ‘ஹானர்’ ஸ்மார்ட்போன்


வானவில் :  அனைவரையும் கவரும் ‘ஹானர்’ ஸ்மார்ட்போன்
x
தினத்தந்தி 15 Aug 2018 11:10 AM IST (Updated: 15 Aug 2018 11:10 AM IST)
t-max-icont-min-icon

ஹூயாவெய் நிறுவனத்தின் துணை பிராண்டான ‘ஹானர்’ இரண்டு லென்ஸ் கொண்ட கேமரா ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஹானர் 7ஏ மற்றும் ஹானர் 7சி என்ற பெயரில் இவை அறிமுகமாகியுள்ளன. சமீபத்தில் நடைபெற்ற விழாவில் இந்த ஸ்மார்ட்போன்களை இந்தி நடிகை நேஹா தூபியா அறிமுகம் செய்தார்.

பிளிப்கார்ட் இணையதளம் மூலம் இந்த ஸ்மார்ட்போன்களை வாங்க முடியும். ஹானர் 7ஏ மாடல் 3 ஜி.பி. ரேம் மற்றும் 32 ஜி.பி. நினைவகத்துடன் வந்துள்ளது. இதன் விலை ரூ. 8,999 ஆகும்.

ஹானர் 7சி மாடல் 3 ஜி.பி. ரேம் 32 ஜி.பி. நினைவகத்துடன் வந்துள்ளது. இதன் விலை ரூ. 9,999 ஆகும். இதில் உயர் ரகமாக 4 ஜி.பி. ரேம் மற்றும் 64 ஜி.பி. நினைவகத்துடன் வந்துள்ளது. இதன் விலை ரூ. 11,999. இந்த மாடல் அமேசான் இணையதளத்தில் கிடைக்கும்.

இரண்டு மாடலுமே கறுப்பு, நீலம், தங்க நிறங்களில் வெளி வந்துள்ளன.

ஹானர் 7ஏ மாடலில் 13 மெகா பிக்ஸல் மற்றும் 2 மெகா பிக்ஸல் கொண்ட இரட்டை லென்ஸ் உள்ளது. இந்தியாவில் இரட்டை லென்ஸ்களுடன் குறைந்த விலையில் விற்பனைக்கு வந்துள்ள ஸ்மார்ட்போன் இதுவே. இதன் முன்பகுதியில் உள்ள 8 மெகா பிக்ஸல் கேமரா ‘செல்பி’ படம் எடுப்பதற்கு மிகவும் ஏற்றது.

இதில் 5.7 அங்குல தொடு திரை உள்ளது. பாதுகாப்பு அம்சமாக இதன் மேல் பகுதி அலுமினியத்தால் ஆனது. பிரீமியம் ஸ்மார்ட்போன்களில் உள்ளதைப் போன்றே முகத்தைக் காட்டியவுடன் செல்போன் இயங்குவது மற்றும் விரல் ரேகைப் பதிவு மூலம் ஆன் செய்யும் வசதி உள்ளது.

இதில் ‘ஐ அவேர் 2.0’ எனும் புதிய ஸ்மார்ட் தொழில்நுட்பம் உள்ளது. இது உபயோகிப்பாளரின் தன்மையை அறிந்து சிறப்பான செயல்பாடுகளை வெளிப்படுத்தும். தேவைப்படும்போது உள்புற நினைவகத் திறனை அதிகரிக்க செய்யும். இதன் மூலம் இதன் செயல்பாடு 20 சதவீத அளவுக்கு மேம்படும்.

இதில் பேட்டரி சேமிப்புக்கான ஐந்தாம் தலைமுறை தொழில் நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது பேட்டரி விரைவாக செலவழிவதைத் தடுக்கும். இதில் 3,000 mAh பேட்டரி இருப்பதால் அதிக நேரம் பயன்படுத்துவோருக்கு மிகவும் ஏற்றது. இதில் ஸ்னாப்டிராகன் 430 ஆக்டா கோர் பிராசஸர் மற்றும் 505 GPU அட்ரினோ உள்ளது.

ஹானர் 7சி மாடலில் தட்டையான 14 மெகா பிக்ஸல் மற்றும் 2 மெகா பிக்ஸல் கொண்ட இரட்டை கேமரா லென்ஸ் உள்ளது. இதன் முன்பகுதியில் 8 மெகா பிக்ஸல் கேமரா உள்ளது. இது தானியங்கி முறையில் செயல்பட்டு துல்லியமான ‘செல்பி’ படம் பிடிக்க உதவும்.

இந்த மாடலில் 5.99 அங்குல தொடு திரை உள்ளது. இது படிப்பதற்கு, வீடியோ பார்ப்பதற்கு மற்றும் விளையாடுவதற்கு ஏற்றது.

தடையின்றி விளையாடுவதற்காக இதில் அட்ரினோ 506 GPU உள்ளது. மேலும் ஸ்மார்ட்பவர் 5.0 தொழில்நுட்பம் இதில் உள்ள 3,000 mAh பேட்டரி நீடித்து, நீண்ட நேரம் செயல்பட உதவுகிறது. இதில் 14 என் எம் ஆக்டா கோர் சிப்செட் மற்றும் 3 ஜி.பி. ரேம் இருப்பதால் முக அடையாளம் மற்றும் கைவிரல் ரேகை பதிவு மூலம் உடனடியாக செயல்பட உதவுகிறது. 

Next Story