பெண் இறந்ததால் மருத்துவமனையில் பொருட்கள் சூறை: பாதுகாப்பு வழங்க கோரி டாக்டர்கள் ஆர்ப்பாட்டம்


பெண் இறந்ததால் மருத்துவமனையில் பொருட்கள் சூறை: பாதுகாப்பு வழங்க கோரி டாக்டர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 16 Aug 2018 4:30 AM IST (Updated: 15 Aug 2018 11:20 PM IST)
t-max-icont-min-icon

பெண் இறந்ததால் மருத்துவமனையில் பொருட்கள் சூறையாடப்பட்டதால் பணி பாதுகாப்பு வழங்க கோரி அரசு டாக்டர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

தஞ்சாவூர்,

தஞ்சையை அடுத்த மாரியம்மன்கோவில் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவருடைய மனைவி கவிதா(வயது37). இவருக்கு சிறுநீரக கோளாறு இருந்ததால் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 6–வது வார்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் கவிதா இறந்தார்.

இதை அறிந்த கவிதாவின் கொழுந்தனார் ஜெயக்குமார், முறையான சிகிச்சை அளிக்காததால் தான் கவிதா இறந்துவிட்டதாக ஆத்திரம் அடைந்தார். உடனே அவர், 6–வது வார்டில் இருந்த டாக்டர்கள், செவிலியர்களை தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், நாற்காலி, கணினியை அடித்து சூறையாடியதாக தெரிகிறது.


இதை கண்டித்தும், பணியில் இருக்கும் டாக்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரியும், மருத்துவமனை பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தியும தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதற்கு மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். இதில் தலைவர் அன்பழகன், பொருளாளர் வினோத், நிர்வாகி கார்த்திகேயன் மற்றும் டாக்டர்கள், பயிற்சி டாக்டர்கள் கலந்து கொண்டு பல்வேறு கோ‌ஷங்கள் எழுப்பினர்.

பின்னர் அனைவரும் மருத்துவக்கல்லூரி முதல்வர் இளங்கோவனை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். இந்த சம்பவம் குறித்து பொது மருத்துவத்துறை உதவி பேராசிரியர் டாக்டர் ரமேஷ் தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story