பள்ளி மாணவிகள் 2 பேர் ஆற்றில் மூழ்கினர் ஒருவர் மீட்பு; மற்றொருவர் கதி என்ன? போலீசார் விசாரணை


பள்ளி மாணவிகள் 2 பேர் ஆற்றில் மூழ்கினர் ஒருவர் மீட்பு; மற்றொருவர் கதி என்ன? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 16 Aug 2018 4:30 AM IST (Updated: 16 Aug 2018 12:22 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை அருகே பள்ளி மாணவிகள் 2 பேர் ஆற்றில் மூழ்கினர். இதில் ஒருவர் மீட்கப்பட்டார். மற்றொருவர் கதி என்ன? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தஞ்சாவூர்,

கர்நாடகத்தில் பெய்து வரும் பலத்த மழையினால் அங்குள்ள அணைகள் நிரம்பி அந்த அணைகளில் இருந்து கூடுதலாக காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணை நிரம்பி அங்கிருந்து அதிக அளவு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் கல்லணைக்கு வந்தவுடன் பாசனத்துக்காக காவிரி, வெண்ணாறு, கல்லணைக்கால்வாய், கொள்ளிடத்தில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் ஆறுகளில் இரு கரைகளையும் தொட்டபடி தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது.

ஆறுகளில் அதிக அளவு தண்ணீர் செல்வதால் யாரும் குளிக்கச் செல்ல வேண்டாம் என ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களிடம் போலீசார் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். ஆனால் இதை பொருட்படுத்தாமல் பலர் ஆறுகளில் குளித்து வருகின்றனர். தஞ்சையை அடுத்த கூடலூர் நந்தவனம் தோட்டத்தை சேர்ந்த குமார் மகள் வசந்தி(வயது15). இவள், அய்யம்பேட்டையில் உள்ள ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறாள். அதே ஊரைச் சேர்ந்த தர்ஷினி(13), 8-ம் வகுப்பு படித்து வருகிறாள்.

நேற்று காலை பள்ளியில் சுதந்திரதின விழாவை கொண்டாடிய வசந்தியும், தர்ஷினியும் நேற்று பிற்பகல் கூடலூரில் உள்ள வெண்ணாற்றில் இறங்கி விளையாடிக் கொண்டு இருந்தனர்.

வெண்ணாற்றில் வினாடிக்கு 9 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் தண்ணீரின் வேகம் அதிகமாக இருந்தது. இதனால் வசந்தியையும், தர்ஷினியையும் தண்ணீர் இழுத்து சென்றதில் அவர்கள் தண்ணீரில் மூழ்கினர்.

இதை அருகில் குளித்துக் கொண்டிருந்த வாலிபர்கள் சிலர் பார்த்து இருவரையும் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். இதில் தர்ஷினியை அவர்கள் உயிருடன் மீட்டனர். ஆனால் வசந்தி தண்ணீரில் மூழ்கி விட்டார்.

இது குறித்து தஞ்சை தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து சென்று மாலை 6.30 மணி வரை தேடினர். ஆனாலும் வசந்தியை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனால் மீட்பு முயற்சியை தற்காலிகமாக நிறுத்தி விட்டு இன்று (வியாழக்கிழமை) காலையில் மீண்டும் தேடும் பணியில் ஈடுபட தீயணைப்பு வீரர்கள் முடிவு செய்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து அறிந்த வல்லம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன், தஞ்சை தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் டேவிட் மற்றும் போலீசார் விரைந்து வந்து வசந்தியின் கதி என்ன? என்று விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story