திருவள்ளூர் மாவட்டத்தில் சுதந்திர தின விழா கலெக்டர் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை
திருவள்ளூர் மாவட்டத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. கலெக்டர் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
திருவள்ளூர்,
திருவள்ளூரில் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நேற்று சுதந்திரதினவிழா கொண்டாடப்பட்டது. திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி தலைமை தாங்கி தேசிய கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் வண்ண பலூன்களையும், வெண்புறாக்களையும் பறக்க விட்டார். அதைத்தொடர்ந்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
பின்னர் அவர் சுதந்திர போராட்ட தியாகிகளை கவுரவிக்கும் வகையில் அவர்களுக்கு கைத்தறி ஆடைகளை அணிவித்தும், பரிசுகளையும், பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கினார். பின்னர் அவர் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு இனிப்புகளை வழங்கினார்.
நலத்திட்ட உதவிகள்
அதைத்தொடர்ந்து கலெக்டர், முன்னாள் ராணுவ வீரர்களுக்கான உதவித்தொகை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் விலையில்லா தையல் எந்திரங்கள், சமூக நலத்துறை சார்பில் 2 பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு பத்திரம், மாவட்ட தாட்கோ அலுவலகம் மூலம் தாட்கோ நிதியில் இருந்து பயனாளிகளுக்கு வாகனங்கள், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் சுயநிதி, விலையில்லா சலவை பெட்டிகள், முதியோர் மற்றும் விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்குதல், வேளாண்மைத்துறை சார்பில் விவசாயிகளுக்கு உபகரணங்கள், தோட்டக்கலைத்துறை சார்பில் உபகரணங்கள் என மொத்தம் 119 பயனாளிகளுக்கு ரூ.50 லட்சத்து 27 ஆயிரத்து 624 மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.
கலை நிகழ்ச்சிகள்
பின்னர் அவர் செய்தி மக்கள் தொடர்புத்துறை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, சுகாதாரத்துறை, கல்வித்துறை, சமூகநலத்துறை, மருத்துவம் மற்றும் பொது சுகாதாரத்துறை , கூட்டுறவு மற்றும் வேளாண்மைத்துறை என பல்வேறு துறைகளை சேர்ந்த அரசு அலுவலர்கள், பணியாளர்கள் சிறப்பாக பணியாற்றியதற்கான பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கி கவுரவித்தார். அதைத்தொடர்ந்து பள்ளி மாணவ– மாணவிகளின் நடனம், நாடகம், பரதநாட்டியம், சிலம்பம் மற்றும் யோகா போன்ற கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இதில் சிறப்பாக செயல்பட்ட மாணவ– மாணவிகளுக்கு கலெக்டர் வாழ்த்துகளை தெரிவித்து பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கினார். இந்த விழாவில் திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னி, திருவள்ளூர் ஆர்.டி.ஓ. ரத்னா, மாவட்ட வருவாய் அலுவலர் சந்திரன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் திவ்யஸ்ரீ, திருவள்ளூர் தாசில்தார் தமிழ்ச்செல்வன் மற்றும் பல்வேறு துறையை சேர்ந்த அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தாசில்தார் அலுவலகம்
அதே போல திருவள்ளூரில் உள்ள தாசில்தார் அலுவலகத்தில் திருவள்ளூர் தாசில்தார் தமிழ்ச்செல்வன் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். திருவள்ளூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் சந்தானம் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். கடம்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்டாலின் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கும், பள்ளி மாணவ– மாணவிகளுக்கும் இனிப்புகளை வழங்கினார்.
ஊத்துக்கோட்டை
ஊத்துக்கோட்டையில் உள்ள குற்றவியல் மற்றும் உரிமையியல் கோர்ட்டில் நீதிபதி பாலகிருஷ்ணன் தேசிய கொடியை எற்றி வைத்தார். வக்கீல்கள் சங்க தலைவர் வேல்முருகன், செயலாளர் குமார், பொருளாளர் சுதாகர், துணைத்தலைவர் தினகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலர் ஜெயகுமார் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். ஊத்துக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் இளங்கோவன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.
பள்ளிப்பட்டு
பள்ளிப்பட்டு தாலுகா பொதட்டூர்பேட்டையில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. அங்குள்ள காந்தி சிலைக்கு முன்னால் எம்.எல்.ஏ.வும் த.மா.கா. மாநில துணைத்தலைவருமான ராமன் மாலை அணிவித்து அஞ்சலி செ லுத்தி அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் த.மா.கா. நிர்வாகிகள் சக்கரப்பன், மாணிக்கம், விநாயகம், குமார், தண்டபாணி, தருமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பள்ளிப்பட்டு தாலுகா அலுவலகத்தில் தேசிகொடியை தாசில்தார் விமலா ஏற்றினார். பள்ளிப்பட்டு பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலர் ஜானகிராமன் தேசிய கொடியை ஏற்றி வைத்து இனிப்புகளை வழங்கினார்.
மீஞ்சூர்
மீஞ்சூர் ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய ஆணையாளர் வேதநாயகம் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரபாபு இனிப்புகளை வழங்கினார். மீஞ்சூர் பேரூராட்சியில் செயல்அலுவலர் யமுனா தேசிய கொடியை ஏற்றி வைத்தார். கொண்டகரை ஊராட்சியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மனோகரன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். ஊராட்சி செயலாளர் முருகன் இனிப்புகளை வழங்கினார்.
நந்தியம்பாக்கம் ஊராட்சியில் பாபு, மெதூர் ஊராட்சியில் செயலாளர் தமிழரசன், அரசூர் ஊராட்சியில் ஆனந்தன், மேலூர் ஊராட்சியில் ரமேஷ் ஆகியோர் தேசிய கொடியை ஏற்றி வைத்து இனிப்புகளை வழங்கினர்.
பொன்னேரி
பொன்னேரி பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலர் பாஸ்கரன், கூட்டுறவு ஊரக வளர்ச்சி வங்கியில் செயலாளர் யுவராஜ் முன்னிலை வகித்தார். தலைவர் பரிமேல்அழகன் தேசிய கொடியை ஏற்றினார். சோழவரம் ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் நர்மதா முன்னிலை வகித்தார்.
ஆணையாளர் குலசேகரன் தேசிய கொடியை ஏற்றினார். சோழவரம் ஊராட்சியில் செயலாளர் முனுசாமி, பஞ்செட்டி ஊராட்சியில் செயலாளர் பாபு ஆகியோர் தேசிய கொடியை ஏற்றி வைத்து இனிப்புகளை வழங்கினர்.
Related Tags :
Next Story