காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு: குமாரபாளையத்தில் 40 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது


காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு: குமாரபாளையத்தில் 40 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது
x
தினத்தந்தி 16 Aug 2018 4:45 AM IST (Updated: 16 Aug 2018 1:28 AM IST)
t-max-icont-min-icon

காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் குமாரபாளையத்தில் 40-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதையடுத்து பொதுமக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். குமாரபாளையம் பழைய பாலத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

குமாரபாளையம்,

மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்ததால் அணையில் இருந்து அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் காவிரி ஆற்றில் தண்ணீர் படிப்படியாக உயர்ந்து கரையோரத்தில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. சில தினங்களுக்கு முன்பு கலைமகள் தெரு இந்திரா நகர், மணிமேகலை தெரு இந்திரா நகர் ஆகிய பகுதிகளில் சுமார் 50-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

இதையடுத்து 250-க்கும் மேற்பட்டோர் அந்த பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டு 2 இடங்களில் அமைக்கப்பட்டு உள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். மேலும் வெள்ளத்தில் சிக்கிய பொதுமக்கள் படகு மூலம் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து கொண்டே இருப்பதால் காவிரி கரையோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டது. தண்டோரா மூலமும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை செய்யப்பட்டது.

இந்த நிலையில் நேற்று மாலை மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 1 லட்சத்து 50 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் குமாரபாளையம் கலைமகள் தெரு இந்திரா நகர், மணிமேகலை தெரு இந்திரா நகர் ஆகிய பகுதிகளில் நேற்று மீண்டும் 40-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஜே.கே.கே.நகராஜா நகராட்சி மண்டபத்திலும், புத்தர் வீதி அரசு நடுநிலைப்பள்ளியிலும் அமைக்கப்பட்டுள்ள முகாம்களுக்கு அழைத்து செல்லப்பட்டு, அங்கு தங்க வைக்கப்பட்டனர்.

இதற்கிடையில் மாவட்ட வருவாய் அலுவலர் பழனிசாமி நேற்று காலை 11 மணியளவில் குமாரபாளையத்துக்கு வந்தார். காவிரி கரையோர பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு உடனடியாக செல்ல வேண்டும் என அறிவுறுத்தினார். அவருடன் தாசில்தார் ரகுநாதன், நகராட்சி ஆணையாளர் மகேஸ்வரி மற்றும் வருவாய் துறை அதிகாரிகளும் உடன் சென்றனர்.

இதேபோல குமாரபாளையத்தையும், பவானியையும் இணைக்கும் பழைய பாலத்தில் பாதுகாப்பு கருதி போக்குவரத்து உடனடியாக நிறுத்தப்பட்டது. இதனால் இரு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டிய, வர வேண்டிய நிலை ஏற்பட்டது. போக்குவரத்து நிறுத்தப்பட்ட அந்த பாலத்தையும் மாவட்ட வருவாய் அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இந்த நிலையில் மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் குமாரபாளையம் பகுதிக்கு சென்று, காவிரி கரையோர பகுதிகளையும், போக்குவரத்து நிறுத்தப்பட்ட பாலத்தையும் பார்வையிட்டார். பின்னர் அவர் கூறியதாவது:-

குமாரபாளையம் பகுதியில் இருந்து ஏற்கனவே 286 பேர் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இதற்கிடையில் மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பு மேலும் அதிகரிக்கும் பட்சத்தில், குமாரபாளையம் காவிரி கரையோர பகுதிகளில் உள்ள மேலும் 30-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பாதிக்கப்படுவார்கள். அவர்களையும் முகாமுக்கு அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்த பகுதியில் மட்டும் மொத்தம் 350 பேர் முகாம்களில் தங்க வைக்கப்படும் நிலை உள்ளது.

இதேபோல பள்ளிபாளையத்தை பொறுத்தவரை ஏற்கனவே 5 குடும்பத்தினர் மட்டுமே முகாமில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். தற்போது மேட்டூர் அணையில் இருந்து மேலும் கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டாலோ, அதேபோல் பவானி சாகர் அணையில் இருந்து 50 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்படும் சூழ்நிலையில் சுமார் 2½ லட்சம் கன அடி தண்ணீர் வரை காவிரியில் வர வாய்ப்புள்ளது.

இதனால் மேலும் பல குடும்பத்தினர் பள்ளிபாளையம் காவிரி கரையோர பகுதியில் இருந்து மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்படுவார்கள். இவ்வாறு கலெக்டர் கூறினார்.

அப்போது கலெக்டருடன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு மற்றும் அதிகாரிகள் உடன் சென்றனர். 

Next Story