பந்தலூர் அருகே காட்டுயானை தாக்கி ஆட்டோ டிரைவர் சாவு


பந்தலூர் அருகே காட்டுயானை தாக்கி ஆட்டோ டிரைவர் சாவு
x
தினத்தந்தி 16 Aug 2018 4:30 AM IST (Updated: 16 Aug 2018 1:31 AM IST)
t-max-icont-min-icon

பந்தலூர் அருகே காட்டுயானை தாக்கி ஆட்டோ டிரைவர் உயிரிழந்தார். அவரது குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கக்கோரி கிராம சபை கூட்டத்தில் அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

பந்தலூர்,

பந்தலூர் தாலுகாவில் உள்ள பந்தலூர், சேரம்பாடி, கொளப்பள்ளி, அய்யன்கொல்லி, பிதிர்காடு, மழவன்சேரம்பாடி ஆகிய பகுதிகளை சுற்றி அடர்ந்த வனப்பகுதிகள் உள்ளன. இந்த வனப்பகுதிகளில் காட்டுயானை, காட்டெருமை, சிறுத்தைப்புலி, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் சுற்றித்திரிகின்றன. அதில் காட்டுயானைகள் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்வது, வாடிக்கையாக உள்ளது. இதனால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சேரம்பாடி அருகே சப்பந்தோடு பகுதிக்குள் காட்டுயானை ஒன்று புகுந்தது. பின்னர் அங்கு ஆட்டோ டிரைவர் அசோக்குமார்(வயது 31) என்பவரது வீட்டின் முன்பு உலா வந்தது.

இதனிடையே நாய் குலைக்கும் சத்தம் கேட்டு, அசோக்குமார் வீட்டில் இருந்து வெளியே வந்து பார்த்தார். அப்போது வீட்டின் முன்பு காட்டுயானை நிற்பது தெரியவந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், வீட்டிற்குள் ஓடி சென்று பின்பக்க அறைக்குள் குடும்பத்தினருடன் பதுங்கினார். உடனே அந்த காட்டுயானை அவரது வீட்டின் பின்பகுதிக்கு சென்று, சுவரை தந்தத்தால் குத்தியது. மேலும் சிமெண்டால் ஆன மேற்கூரையையும் துதிக்கையால் பிரித்து வீசியது. இதையடுத்து பின்பக்க கதவை உடைத்து, அங்கு பதுங்கியிருந்த அசோக்குமாரை துதிக்கையால் தாக்கியது. மேலும் அவரை தூக்கி வெளியே வீசி, காலால் மிதித்தது. இதில் படுகாயம் அடைந்த அவர், ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதனிடையே அவரது குடும்பத்தினரின் அலறல் சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்தனர். இதையடுத்து அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றது. சம்பவம் குறித்து தகவல் அறிந்த சேரம்பாடி வனத்துறைனர் விரைந்து வந்தனர். பின்னர் அசோக்குமாரின் உடலை கைப்பற்ற முயன்றனர். அப்போது உடலை எடுக்க விடாமல் அவர்களை தடுத்து, பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த தேவாலா போலீஸ் துணை சூப்பிரண்டு சிவக்குமார், சேரம்பாடி இன்ஸ்பெக்டர் வெற்றிவேல்ராஜன், வனச்சரகர் மனோகரன் ஆகியோர் அங்கு வந்தனர். பின்னர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து, பிணத்தை மீட்டு கூடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் நேற்று சேரம்பாடி சமுதாய கூடத்தில் சேரங்கோடு ஊராட்சி கிராம சபை கூட்டம் நடந்தது. அதற்கு துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பிரகாஷ் தலைமை தாங்கினார். ஊராட்சி செயலாளர் சஜித், கணக்காளர் ஷைனி, வருவாய் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி, கிராம நிர்வாக அலுவலர் யுவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அப்போது காட்டுயானை தாக்கி உயிரிழந்த அசோக்குமாரின் மனைவி கவிதா(30), மகள் டேனிகா(10), மகன் அஜய் பிரசாந்த்(7) மற்றும் பொதுமக்கள் அரை நிர்வாண கோலத்தில் அங்கு வந்தனர். பின்னர் அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது இறந்த அசோக்குமாரின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும், தொகுப்பு வீடு கட்டி கொடுக்க வேண்டும், காட்டுயானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இந்த கோரிக்கைகளை தீர்மானமாக நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இதையடுத்து தீர்மானம் நிறைவேற்றி, மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்வதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பின்னர் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story