தென்மேற்கு பருவமழை தீவிரம் கோவையில் 18 குளங்கள் நிரம்பின; நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு


தென்மேற்கு பருவமழை தீவிரம் கோவையில் 18 குளங்கள் நிரம்பின; நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு
x
தினத்தந்தி 16 Aug 2018 4:00 AM IST (Updated: 16 Aug 2018 1:31 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதன்காரணமாக மாவட்டத்தில் உள்ள 18 குளங்கள் இதுவரை நிரம்பி உள்ளன. மழையால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கோவை,

கோவை மாவட்டத்தில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. குறிப்பாக மேற்குமலை தொடர்ச்சியை ஒட்டிய பகுதிகளில் மழையின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதன்காரணமாக பசுமை நிறைந்த மலைகளின் நடுவே ஆங்காங்கே புதிய நீர்வீழ்ச்சிகள் தோன்றியுள்ளன. இது காண்போரின் கண்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

கோவையில் பெய்து வரும் மழையால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த ஆற்று தண்ணீர் குளங்கள், குட்டைகள் உள்ளிட்ட நீர்நிலைகளுக்கு திருப்பி விடப்பட்டுள்ளது. இதனால் பெரும்பாலான குளங்கள் நிரம்பி உள்ளன. இதன் உபரி நீர் பிற நீர்நிலைகளுக்கு திருப்பி விடப்பட்டுள்ளது. இதுகுறித்து குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் நிர்வாகி மணிகண்டன் கூறியதாவது:–

கோவை மாவட்டத்தில் மொத்தம் 24 குளங்கள் உள்ளன. இதில் தற்போது பெய்து வரும் மழை காரணமாக உக்குளம், புதுக்குளம், கோளராம்பதி, உக்கடம் பெரியகுளம், நரசாம்பதி குளம், கோளராம்பதி குளம், செங்குளம், பேரூர் பெரிய குளம், சொட்டையாண்டி குளம், செல்வசிந்தாமணி குளம், கிருஷ்ணாம்பதி குளம், நீலம்பூர் குளம், சூலுர் பெரிய குளம் உள்ளிட்ட 18 குளங்கள் நிரம்பி உள்ளன.

மேலும் 350 ஏக்கர் பரப்பளவு கொண்ட கோவை குறிச்சி குளம் தற்போது 90 சதவீதம் வரை நிரம்பி உள்ளது. இதேபோல் வெள்ளலூர் குளமும் 80 சதவீதம் நிறைந்து உள்ளது. இந்த மழை இன்னும் சில நாட்களுக்கு நீடித்தால் அனைத்து குளங்களும் நிரம்பிவிடும். நொய்யல் ஆற்றில் உள்ள சித்திரைச்சாவடி தடுப்பணை, புட்டுவிக்கி தடுப்பணை, சுண்ணாம்பு காளவாய் தடுப்பணை உள்ளிட்ட தடுப்பணைகள் நிரம்பி வழிகின்றன. பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பி உள்ளதால் நிலத்தடி நீர்மட்டம் நன்கு உயர்ந்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து கோவை வேளாண்மை காலநிலை ஆராய்ச்சி மைய தலைவர் பன்னீர்செல்வம் கூறியதாவது:–

கோவையில் தென்மேற்கு பருவமழை சராசரியாக 209 மில்லி மீட்டர் பெய்ய வேண்டும். இந்த ஆண்டு கடந்த ஜூன் மாதம் தொடங்கி இதுவரை 153 மி.மீ. மழை பெய்து உள்ளது. தற்போது பெய்து வரும் மழை மேலும் 2 நாட்கள் நீடிக்கும். கோவையில் பகல் நேர வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் முதல் 31 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். காற்றின் வேகம் மணிக்கு 12 முதல் 14 கிலோ மீட்டர் வேகத்தில் இருக்கும்.

கடந்த ஜனவரி மாதம் தொடங்கி இதுவரை 478 மி.மீ. மழை பெய்துள்ளது. இது கடந்த ஆண்டை காட்டிலும் அதிகமாகும். தென்மேற்கு பருவமழை அடுத்த மாதம் (செப்டம்பர்) மாதம் இறுதி வரை நீடிக்கும். எனவே இந்த ஆண்டு சராசரியை காட்டிலும் அதிகமாக தென்மேற்கு பருவமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Related Tags :
Next Story