ராமநாதபுரம் அருகே பொதுமக்கள் மடக்கி பிடித்த வாலிபர்களிடம் இருந்து 42 பவுன் மீட்பு


ராமநாதபுரம் அருகே பொதுமக்கள் மடக்கி பிடித்த வாலிபர்களிடம் இருந்து 42 பவுன் மீட்பு
x
தினத்தந்தி 16 Aug 2018 3:30 AM IST (Updated: 16 Aug 2018 1:32 AM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோவில் அருகே பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற கும்பலை பொதுமக்கள் துரிதமாக செயல்பட்டு மடக்கினர்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோவில் அருகே உள்ள கழனிக்குடி பகுதியை சேர்ந்த நீலமேகம் என்பவரின் மனைவி முனியம்மாள்(வயது 60) என்பவரிடம் நகையை பறிக்க முயன்ற கும்பல் காரில் தப்பிச்செல்ல முயன்றனர். அவர்களை பொதுமக்கள் துரிதமாக செயல்பட்டு மடக்கினர்.

போலீசார் விரைந்து சென்று வாலிபர்களை பிடித்து வந்து விசாரணை செய்தனர்.

இந்த விசாரணையில் பரமக்குடி அருகே உள்ள கச்சான் பகுதியை சேர்ந்த சண்முகம் மகன் சக்திவேல், சென்னை பெசன்ட்நகர் ஓலைக்குப்பம் ராமச்சந்திரன் மகன் செல்வகுமார் வசந்த், சென்னை காமராஜர் நகர் 4–வது தெருவை சேர்ந்த முருகேசன் மகன் தினேஷ் என்பது தெரிந்தது. இவர்களிடம் நடத்திய தொடர் விசாரணையில் பரமக்குடி காரடர்ந்தகுடி காலனி ரவி மகன் வினோத், குமரேசன் மகன் ராஜேஸ்பாண்டி ஆகியோருடன் சேர்ந்து நகை பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது. இவர்கள் மீது ராமநாதபுரத்தில் 10 செயின்பறிப்பு வழக்குகளும், சிவகங்கையில் ஒரு வழக்கும் நிலுவையில் உள்ளது. இவர்கள் கூட்டாக சேர்ந்து செயின்பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டு சேகரித்த நகைகளை பல்வேறு இடங்களில் கொடுத்து வைத்திருப்பதை போலீசார் விசாரணையில் தெரிந்து கொண்டனர். இதனை தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ்மீனா உத்தரவின்பேரில் தனிப்படை போலீசார் அந்தந்த பகுதிகளுக்கு சென்று சுமார் 42 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 5 பேரும் விசாரணைக்கு பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.


Next Story