தொடர் மழை காரணமாக திருப்பூர் நொய்யல் ஆற்றில் நீர் வரத்து அதிகரிப்பு
பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக திருப்பூர் நொய்யல் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. இதனால் மங்கலம் அருகே உள்ள நல்லம்மன் கோவிலை தண்ணீர் சூழ்ந்தது.
திருப்பூர்,
தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களிலும் பருவமழை பெய்து வருகிறது. இதனால் பெரும்பாலான அணைகள், ஆறுகள், குளம், குட்டைகளும் நிரம்பி வழிகின்றன. பல குடியிருப்பு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால் அணைகளில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. அந்த வகையில் திருப்பூரின் அண்டை மாவட்டங்களில் உள்ள அணைகளில் இருந்தும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
இதனால் திருப்பூரின் முக்கிய நீர் ஆதாரமாக உள்ள, நொய்யல் ஆற்றில் நீர் வரத்து நேற்று காலை முதல் அதிகமாக இருந்தது. குப்பைகளுடன் அதிக அளவில் தண்ணீர் வந்ததால் அணைப்பாளையம் பகுதியில் உள்ள தரைப்பாலம் மூழ்கியது. இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர். மேலும், தடையை மீறி யாரும் அந்த வழியாக பயணிக்க கூடாது என்பதற்காக அங்கு பாதுகாப்புக்காக போலீசார் நிறுத்தப்பட்டிருந்தனர்.
இதுபோல் நொய்யலாற்றின் குறுக்கே பெத்திச்செட்டிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தடுப்பணைகளை தாண்டி தண்ணீர் கரைபுரண்டு ஓடியது. திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் வாகன ஓட்டிகளும், பொதுமக்கள் பலரும் ஆங்காங்கே நின்று வேடிக்கை பார்த்தனர். பல இடங்களில் நுரையுடன் வெள்ளம் பாய்ந்து ஓடியது. மங்கலம் வழியாக செல்லும் நொய்யல் ஆற்றில் அதிகளவு தண்ணீர் வந்ததால் நல்லம்மன் தடுப்பணை அருகே உள்ள நல்லம்மன் கோவிலை தண்ணீர் சூழ்ந்தது.
மேலும் கருமை நிறத்தில் நிறம் மாறியும் அதிக நுரையுடனும் வருவதால் நொய்யல் ஆற்றை ஒட்டியுள்ள பகுதிகளில் வெள்ளை படிமங்களாக தேங்கி நிற்கின்றன. சாயக்கழிவுகள் கலக்கப்பட்டதே இதற்கு காரணம் என்று அந்த பகுதியில் உள்ள விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நொய்யல் ஆற்றோரத்தில் உள்ள பல சாயப்பட்டறைகள் சாயக்கழிவுநீரை திறந்து விட வாய்ப்பு அதிகம் இருப்பதால் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் விழிப்புடன் செயல்பட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.