ஈரோட்டில் சுதந்திரதின விழா: கலெக்டர் எஸ்.பிரபாகர் தேசியக்கொடி ஏற்றினார்


ஈரோட்டில் சுதந்திரதின விழா: கலெக்டர் எஸ்.பிரபாகர் தேசியக்கொடி ஏற்றினார்
x
தினத்தந்தி 16 Aug 2018 4:30 AM IST (Updated: 16 Aug 2018 1:33 AM IST)
t-max-icont-min-icon

சுதந்திர தினவிழாவையொட்டி ஈரோட்டில் கலெக்டர் எஸ்.பிரபாகர் தேசியக்கொடி ஏற்றிவைத்தார். விழாவில் ரூ.16¼ லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

ஈரோடு,

இந்திய சுதந்திரதின விழா நேற்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஈரோடு மாவட்ட நிர்வாகம் சார்பில் ஈரோடு வ.உ.சி.பூங்கா விளையாட்டு அரங்கில் சுதந்திரதின விழா கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு மைதானத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. நேற்றுக்காலை முதல் அனைத்து துறை அதிகாரிகளும் விழா மைதானத்துக்கு வரத்தொடங்கினார்கள்.

காலை 9.15 மணிக்கு மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் அரசு மரியாதையுடன் அழைத்து வரப்பட்டார். ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.சக்திகணேசன், மாட்ட வருவாய் அதிகாரி கவிதா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ஆர்.நர்மதாதேவி மற்றும் அதிகாரிகள் மைதான நுழைவு வாயிலுக்கு வந்து கலெக்டருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

தொடர்ந்து கிறிஸ்து ஜோதி பள்ளிக்கூட பெரு இசைக்குழு மாணவிகள் இசை அணிவகுப்பு செய்து கலெக்டர் மற்றும் அதிகாரிகளை கொடி மேடை நோக்கி அழைத்து வந்தனர். கொடி மேடைக்கு வந்ததும் அங்கு தயாராக இருந்த தேசியக்கொடியை கலெக்டர் எஸ்.பிரபாகர் ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அப்போது காவல்துறை இசைக்குழுவினர் தேசிய கீதம் இசைக்க அனைத்து துறை அதிகாரிகள், பொதுமக்கள் அனைவரும் எழுந்து நின்று தேசியக்கொடிக்கு ‘சல்யூட்’ அடித்து மரியாதை செலுத்தினார்கள்.

பின்னர் திறந்த ஜீப்பில் சென்ற கலெக்டரும், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டும் ஆயுதப்படை போலீசார், தேசிய மாணவர் படையினரின் அணிவகுப்பினை பார்வையிட்டனர். அங்கிருந்து கொடி மேடைக்கு வந்தனர். அங்கு கலெக்டர் எஸ்.பிரபாகர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன், மாவட்ட வருவாய் அதிகாரி கவிதா ஆகியோர் மூவர்ண பலூன்கள் பறக்க விட்டனர். அப்போது கூடி இருந்த பொதுமக்கள் உற்சாகமாக கரவொலி எழுப்பினார்கள்.

விழாவின் முக்கிய நிகழ்வாக ஆயுதப்படை போலீசார் அணிவகுத்து வந்து மரியாதை செலுத்தினார்கள். கொடி மேடையில் நின்று கொண்டே கலெக்டர் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டனர். ஆயுதப்படை போலீஸ் அணிவகுப்பினை இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் வழிநடத்தினார். ஆயுதப்படை பெண் போலீசார் பிரிவினை சப்–இன்ஸ்பெக்டர் உமா வழிநடத்தினார்.

ஆயுதப்படை அணிவகுப்பை தொடர்ந்து ஊர்க்காவல் படையினரும். தேசிய மாணவர் படை ஆண்–பெண் பிரிவினர் அணிவகுத்து வந்தனர்.

விழாவில் காவல்துறையில் சாதனை படைத்த போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், சந்தனபாண்டின், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் ராதாகிருஷ்ணன், செல்வம், ரமேஷ், இன்ஸ்பெக்டர்கள் பாலமுரளி சுந்தரம், சுகவனம், மணிகண்டன் உள்பட 73 போலீசார் பாராட்டு சான்றிதழ் பெற்றுக்கொண்டனர். உணவு பாதுகாப்பு துறை சார்பில் மாவட்ட நியமன அதிகாரி டாக்டர் கலைவாணி பாராட்டு சான்றிதழ் பெற்றார்.

ஒளிரும் ஈரோடு அமைப்பு, இந்திய தொழில் கூட்டமைப்பு, இளம் இந்தியர்கள் அமைப்பு ஆகியவை சமுதாய பணியை சிறப்பாக செய்தற்காக நிர்வாகிகள் பாராட்டு சான்றிதழ்கள் பெற்றுக்கொண்டனர். சிறந்த சமூக சேவைக்காக சக்தி தேவி அறக்கட்டளை அறங்காவலர்கள் பி.சி.துரைசாமி, சாந்தி துரைசாமி ஆகியோருக்கு பாராட்டு சான்றிதழை கலெக்டர் எஸ்.பிரபாகர் வழங்கினார். பொதுச்சேவையில் ஈடுபட்டு வரும் பாம்பு பிடி வீரர் யுவராஜா, தண்ணீரில் சிக்கியவர்களை மீட்ட வாலிபர் பால்ராஜ் ஆகியோரும் பாராட்டு சான்றிதழ் பெற்றனர்.

பள்ளிக்கல்வித்துறை சார்பில் தலைமை ஆசிரியர் பிரகாஷ், அனைவருக்கும் கல்வி இயக்க ஒருங்கிணைப்பாளர் வித்யா, உடற்கல்வி ஆசிரியர் சிவக்குமார் உள்பட 20 பேர் பாராட்டு சான்றிதழ் பெற்றுக்கொண்டனர்.

மருத்துவம், ஊரக நலப்பணிகள் மற்றும் குடும்பநலத்துறை சார்பில் ஈரோடு அரசு ஆஸ்பத்திரி செவிலியர் கண்காணிப்பாளர்கள் ஜெயலட்சுமி, நாகம்மாள், இயன்முறை மருத்துவ பிரிவு ஜெயக்குமார், தாமோதரன், 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் தமிழரசு, சந்திரன் ஆகியோர் பாராட்டு சான்றிதழ் பெற்றனர்.

இதுபோல் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சி முகமை, வேளாண்மைத்துறை, சாலை பாதுகாப்பு படை, வனத்துறை, நகராட்சி மற்றும் மாநகராட்சிகள் உள்பட பல்வேறு துறைகளை சேர்ந்த 256 பேருக்கு கலெக்டர் எஸ்.பிரபாகர் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

விழாவில் வருவாய்த்துறை, வேளாண்மைத்துறை, தாட்கோ, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபாமையினர் நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 50 பேருக்கு ரூ.16 லட்சத்து 35 ஆயிரத்து 665 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

முன்னதாக விடுதலை போராட்ட தியாகிகள், அவர்களின் வாரிசுகள் மற்றும் மொழிப்போர் தியாகிகள் மற்றும் அவர்களின் வாரிசுகளுக்கு கலெக்டர் தலைமையில் அதிகாரிகள் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

விழாவையொட்டி பள்ளிக்கூட மாணவ–மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

ஈரோடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் அன்புக்கினியது நம் தேசம் என்ற பாடலை ஆடி அனைவரையும் கவர்ந்தனர். திண்டல் பி.வி.பி. பள்ளிக்கூட மாணவிகள் அப்துல்காலாம் குறித்த பாடலை பாடியதுடன் ஏ.பி.ஜே. என்று ஆங்கில எழுத்து வடிவில் அணிவகுத்து பாராட்டு பெற்றனர். ஈரோடு கலைமகள் கல்வி நிலையம் மாணவிகள் தேசபக்தி பாடலுக்கு வண்ண உடைகளுடன் நடனம் ஆடி கவர்ந்தனர். கிரீன் பார்க் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வு பாடலுக்கு நடனம் ஆடி பாராட்டு பெற்றனர். வேளாளர் மகளிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் தேசபக்தி பாடலுக்கும் நடனம் ஆடினார்கள்.

கலை நிகழ்ச்சிகள் நடத்திய மாணவ–மாணவிகளுக்கு உடனடியாக பாராட்டு தெரிவிக்கும் வகையில் கலெக்டர் எஸ்.பிரபாகர் மைதானத்துக்கே சென்று வாழ்த்து தெரிவித்தார்.

விழாவில் கலெக்டர் எஸ்.பிரபாகர் அவரது மனைவி டாக்டர் ‌ஷர்மிளா மற்றும் குழந்தைகளுடன் வந்து கலந்து கொண்டார்.

பயிற்சி கலெக்டர் பத்மஜா, ஆர்.டி.ஓ.(பொறுப்பு) ஜெயராமன், தாசில்தார்கள் அமுதா, மாசிலாமணி, ஜெயக்குமார் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் ராதாகிருஷ்ணன் (குற்றப்பிரிவு), ஏ.சேகர் (போக்குவரத்து), ராஜகுமார், வித்யா, சரஸ்வதி (பயிற்சி), சுகாதாரப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் ரமாமணி, உறைவிட மருத்துவ அதிகாரி டாக்டர் அரங்கநாயகி, காசநோய் பிரிவு துணை இயக்குனர் டாக்டர் கனகராஜ், ஒளிரும் ஈரோடு அமைப்பு தலைவர் அக்னி எம்.சின்னசாமி, மாவட்ட விளையாட்டு அதிகாரி நோயிலின் ஜான், செய்தி– மக்கள் தொடர்பு அதிகாரி விக்னேஷ், உதவி மக்கள் தொடர்பு அதிகாரிகள் ராம்குமார், கலைமாமணி, உடற்கல்வி பேராசிரியர் ரமேஷ் உள்பட அனைத்து துறை அதிகாரிகள், சமூக நல அமைப்பினர் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிகளை ஆசிரியர் திருமலை அழகன் தொகுத்து வழங்கினார்.

இறுதியில் தேசிய கீதத்துடன் விழா நிறைவடைந்தது.

ஈரோடு வ.உ.சி. பூங்கா விளையாட்டு அரங்கில் நேற்றுக்காலை சுதந்திரதின விழா நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருந்தன. அப்போது ஈரோடு மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்டங்களை சிறப்பாக நிறைவேற்றியதற்காக மாநில அளவிலான விருதுக்கு தேர்வு பெற்று, அதனை முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் அறிவித்த விவரம் தெரியவந்தது.

இதுபற்றி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை அதிகாரி ச.விக்னேஷ் அங்கு ஒலிபெருக்கியில் அறிவித்தார். அதைக்கேட்டு அங்கு கூடி இருந்த அதிகாரிகள், பார்வையாளர் மாடத்தில் உட்கார்ந்திருந்த பொதுமக்கள் மற்றும் மாணவ–மாணவிகள் உற்சாகமாக கரவொலிகள் எழுப்பி கலெக்டருக்கு பாராட்டு தெரிவித்தனர். அவர் மைதானத்தில் நின்று கொண்டு 2 கைகளையும் கூப்பி பொதுமக்களுக்கு வணக்கம் தெரிவித்து பாராட்டினை ஏற்றுக்கொண்டார்.


Next Story