கோலாகலமாக நடந்த சுதந்திர தின விழா: நாராயணசாமி தேசியக்கொடி ஏற்றினார்


கோலாகலமாக நடந்த சுதந்திர தின விழா: நாராயணசாமி தேசியக்கொடி ஏற்றினார்
x
தினத்தந்தி 16 Aug 2018 5:30 AM IST (Updated: 16 Aug 2018 2:25 AM IST)
t-max-icont-min-icon

உப்பளம் மைதானத்தில் கோலாகலமாக நடந்த சுதந்திரதின விழாவில் முதல்-அமைச்சர் நாராயணசாமி தேசியக்கொடியேற்றி மரியாதை செலுத்தினார்.

புதுச்சேரி,

புதுவை உப்பளம் மைதானத்தில் சுதந்திர தினவிழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. விழாவில் பங்கேற்க முதல்-அமைச்சர் நாராயணசாமி காலை 9-04 மணிக்கு வந்தார். அவரை தலைமை செயலாளர் அஸ்வனிகுமார் வரவேற்று விழா மேடைக்கு அழைத்து வந்தார். அங்கு அவர் தேசியக்கொடியேற்றி மரியாதை செலுத்தினார். அப்போது போலீஸ் பேண்டு வாத்திய குழுவினர் தேசியகீதம் இசைத்தனர்.

தொடர்ந்து முதல்-அமைச்சர் நாராயணசாமி திறந்த ஜீப்பில் சென்று போலீசாரின் அணிவகுப்பை பார்வையிட்டார். பின்னர் மேடைக்கு திரும்பிய அவர் சுதந்திர தின உரையாற்றினார். அதன்பின் பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு விருதுகள், பதக்கங்கள் மற்றும் ரொக்கப்பரிசுகளை வழங்கினார்.

அதன்பின் காவலர், தேசிய மாணவர்படை, சாரணர்கள், நாட்டு நலப்பணித்திட்ட மாணவ, மாணவிகள், சாலை போக்குவரத்து அணியினர், அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவிகளின் அணிவகுப்பு நடந்தது. அதை நாராயணசாமி ஏற்றுக்கொண்டார்.

அதைத்தொடர்ந்து பல்வேறு கலைக்குழுவினரின் அணிவகுப்பு மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. முடிவில் சிறந்த அணிவகுப்பு மற்றும் கலை நிகழ்ச்சிக்கான விருதுகளை வழங்கினார். அதைத் தொடர்ந்து விழா நிறைவடைந்தது.

அதன்பின் புதுவை சட்டசபைக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி வந்தார். அங்கு நடந்த சுதந்திரதின விழாவில் தேசியக்கொடியேற்றி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் போலீசாரின் மரியாதையையும் ஏற்றுக்கொண்டார்.

இந்த சுதந்திர தின விழாவில் சபாநாயகர் வைத்திலிங்கம், அமைச்சர்கள் கந்தசாமி, ஷாஜகான், துணை சபாநாயகர் சிவக்கொழுந்து எம்.எல்.ஏ.க்கள் லட்சுமிநாராயணன், அனந்தராமன், சிவா, ஜெயமூர்த்தி, தீப்பாய்ந்தான், விஜயவேணி, நியமன எம்.எல்.ஏ.க்கள் சாமிநாதன், சங்கர், செல்வகணபதி மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Next Story