புதுவையில் பலத்த மழை; மின்னல் தாக்கி 7 மீனவர்கள் படுகாயம்


புதுவையில் பலத்த மழை; மின்னல் தாக்கி 7 மீனவர்கள் படுகாயம்
x
தினத்தந்தி 16 Aug 2018 4:15 AM IST (Updated: 16 Aug 2018 2:25 AM IST)
t-max-icont-min-icon

புதுவையில் காற்றுடன் பலத்த மழை பெய்தது இதனால் சாலைகளில் வெள்ளம் போல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மின்னல் தாக்கியதில் கடலில் மீன் பிடித்துக் கொண்டு இருந்த மீனவர்கள் 7 பேர் படுகாயமடைந்தனர்.

புதுச்சேரி,

வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலைக்கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று உள்ளது. இதனால் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.

அதன்படி புதுச்சேரியில் நேற்று காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. இந்த நிலையில் மாலை 6 மணிக்கு பலத்த மழை பெய்யத்தொடங்கியது. இந்த மழை இரவு 9 மணிக்கும் மேல் நீடித்தது. தொடர்ந்து சாரல் மழை பெய்தபடி இருந்தது.

இதனால் புதுவை கடற்கரை வெறிச்சோடி காணப்பட்டன. புதுவைக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் பெரும்பாலானோர் விடுதிகளில் முடங்கி இருந்தனர். சிலர் மழையில் நனைந்தபடி ஊரை சுற்றிப்பார்த்தனர்.

கனமழை காரணமாக பிரதான சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. அதேபோல் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி குளம்போல் காட்சி அளித்தது. மழையால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிக்கு உள்ளானார்கள். புதுவை நகரங்களில் மட்டுமின்றி சுற்று வட்டாரங்களிலும் மழை பெய்தது.

புதுவை மாநிலம் முத்தியால்பேட்டை சோலைநகர் பகுதியை சேர்ந்தவர்கள் சுதாகர் (வயது 38). குகன் (20), விஜயன்(42), ஜலேந்திரன்(40), கலியபெருமாள்(47), அருள்(46), கந்தவேல்(45). மீனவர்களான இவர்கள் 7 பேரும் கடந்த 13-ந் தேதியன்று விசைப்படகில் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.

இன்று (வியாழக்கிழமை) அவர்கள் கரைக்கு திரும்ப முடிவு செய்திருந்தனர். இந்தநிலையில் நேற்று மாலை புதுவையில் இருந்து 23 நாட்டிக்கல் மைல் தூரத்தில் நேற்று மாலை மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது மழை பெய்து கொண்டிருந்ததால் அவர் களுடைய விசைப்படகில் திடீரென மின்னல் தாக்கியது. இதனால் படகில் பொருத்தப்பட்டிருந்த திசைக்காட்டும் கருவி உள்பட அனைத்து மின்சாதனங்களும் சேதமடைந்தன. மேலும் மின்னல் ஒளியால் மீனவர்கள் நிலைகுலைந்தனர். ஆனால் அதிர்ஷ்டவசமாக அவர்களது உயிருக்கு ஆபத்து ஏற்படவில்லை. காயங்களுடன் அவர்கள் தப்பினார்கள்.

மின்னல் தாக்கியதில் படகில் இருந்த மீனவர் சுதாகருக்கு காது கேட்கவில்லை. கலியபெருமாள், ஜலேந்திரன், கந்தவேலு ஆகியோருக்கும் காயம் ஏற்பட்டது. விஜயன், குகன் ஆகியோருக்கு கண் எரிச்சல் ஏற்பட்டது.

இதுகுறித்து அவர்கள் தங்களின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். திசைகாட்டும் கருவி இல்லாததாலும், மின் விளக்குகள் எரியாததாலும் நடுக்கடலில் இருந்து சேதமடைந்த படகுடன் தட்டுத்தடுமாறி கரைக்கு திரும்பினார்கள்.

உறவினர்கள் அவர்களை மீட்டு உடனடியாக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த சம்பவம் புதுவை மீனவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story