வரலாற்று தொடர்புடைய இடங்களை பார்வையிடும் சென்னை வாரம் 19-ந்தேதி தொடங்குகிறது
சென்னையில் உள்ள வரலாற்று தொடர்புடைய இடங்களை பார்வையிடும் ‘சென்னை வாரம்’ வரும் 19-ந்தேதி (ஞாயிற்றுக் கிழமை) தொடங்குகிறது.
சென்னை
வரலாற்று ஆய்வாளர் எஸ்.முத்தையா சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-
சென்னை நகரம் 1639-ம் ஆண்டு, ஆகஸ்டு 22-ந்தேதி அன்று உருவானதாக கூறப்படுகிறது. அதாவது, 1639-ம் ஆண்டு தான் செயின்ட் ஜார்ஜ் கோட்டையை ஆங்கிலேயர்கள் கட்டினார்கள். அதுதான் சென்னை நகரம் உருவாக காரணமாக அமைந்தது. எனவே, ஆகஸ்டு 22-ந்தேதி சென்னை தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
கடந்த 2004-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் சென்னை தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. தற்போது 14-வது ஆண்டாக இந்த தினத்தை ‘நம்ம மெட்ராஸ், நல்ல மெட்ராஸ்’ என்ற தலைப்பில் வரும் 19-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி வரும் 26-ந்தேதி வரை ‘சென்னை வாரம்’ கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது. குறிப்பாக சொற்பொழிவுகள், நடை பயணம், வரலாற்று சிறப்பு மிக்க பகுதிகளை பார்வையிடுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.
மதராசபட்டினம் கல்வெட்டு
மதராசபட்டினம் பற்றிய கல்வெட்டுகள் மற்றும் சென்னையில் வரலாற்று நிகழ்வுகள் நடந்த இடங்கள் குறித்தும் பேராசிரியர்கள் மற்றும் வரலாற்று ஆய்வாளர்கள் சொற்பொழிவாற்றுகின்றனர். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இடத்தில் இந்த நிகழ்ச்சி நடக்கிறது. வருகிற 19-ந்தேதி காலை 5 மணிக்கு பழைய மாமல்லபுரம் சாலையில் இருந்து திருக்கழுக்குன்றம் வரை வரலாற்று தொடர்பான இடங்களை பார்வையிடுதல் நிகழ்ச்சி நடக்கிறது.
தொடர்ந்து அன்று சென்னை மியூசியத்தில் பகல் 11 மணி அளவில் கல்வெட்டுகள் குறித்த சொற்பொழிவு நடக்கிறது. பகல் 1 மணிக்கு சாந்தோமில் உள்ள செயின்ட் பீட்ஸ் ஆடிட்டோரியத்தில் வினாடி-வினா போட்டிகள் நடத்தப்படுகிறது. இவ்வாறு தொடர்ந்து 26-ந்தேதி வரை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. இதில் பங்கேற்க விரும்புபவர்கள் www.the-m-a-d-r-as-d-ay.in என்ற இணையதள முகவரியில் சென்று தெரிந்து கொள்ளலாம்.
சட்டம் தேவை
வரலாற்று பின்னணி கொண்ட சென்னை நகரில் உள்ள பழமையான கட்டிடங்களை பாதுகாக்க தனியாக சட்டம் கொண்டு வரவேண்டும். குறிப்பாக கடந்த 2010-ம் ஆண்டு பாரம்பரியத்தை காக்க மாநில அரசு சட்டம் கொண்டு வந்தாலும் அவை முறையாக நிறைவேற்றப்படவில்லை. சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு கட்டிடம் சீரமைக்கப்பட்டது போல் பழமையான கட்டிடங்களை சீரமைக்க அரசு கவனம் செலுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சென்னை வாரத்தை கொண்டாட ஏற்பாடுகள் செய்து வரும் வி.சாய்ராம், மோகன் ராமன், சத்தியன் பட், சுசீலா ரவீந்திரநாத் ஆகியோர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story