சென்னை அண்ணாநகரில் போலீஸ் நிலையம் எதிரே வாலிபர் குத்திக்கொலை ஒருவர் கைது
சென்னை அண்ணாநகரில் முன்விரோதம் காரணமாக போலீஸ் நிலையம் எதிரே வாலிபரை கத்தியால் குத்திக்கொலை செய்த சம்பவம் தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
பூந்தமல்லி,
சென்னை அரும்பாக்கம், அசோக் நகரைச் சேர்ந்தவர் ஆதித்யன் (வயது 21). இவர், அந்த பகுதியில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் கேன்கள் போடும் தொழில் செய்து வந்தார். நேற்று காலை அண்ணாநகர், 3-வது அவென்யூவில் அமைந்தகரை போலீஸ் நிலையம் எதிரே ஆதித்யன் நின்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த மர்மகும்பல் திடீரென ஆதித்யனை, கத்தியால் சரமாரியாக குத்தி விட்டு தப்பிச்சென்று விட்டது. இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த ஆதித்யன், மயங்கினார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த அண்ணாநகர் போலீசார், ஆதித்யனை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், ஆதித்யன் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
ஒருவர் கைது
இது குறித்து அண்ணா நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர். போலீஸ் விசாரணையில், அரும்பாக்கத்தைச் சேர்ந்த சந்தீப்குமார் (21) என்பவர்தான் ஆதித்யனை தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து சந்தீப்குமாரை கைது செய்த போலீசார் அவரிடம் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.
முன்விரோதம்
கொலை செய்யப்பட்ட ஆதித்யனுக்கும், சந்தீப்குமாருக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்து உள்ளது. இந்த முன்விரோதம் காரணமாக கடந்த மாதம் சந்தீப்குமார் மற்றும் அவருடைய தம்பி ராஜ்குமார் ஆகியோருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஆதித்யன், இருவரையும் தாக்கியதுடன் “அண்ணன்-தம்பி இருவரையும் காலி செய்துவிடுவேன்” என்று மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
இதில் ஆத்திரமடைந்த சந்தீப்குமார், நேற்று தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து ஆதித்யனை சரமாரியாக கத்தியால் குத்திக்கொலை செய்து இருப்பது விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
சந்தீப்குமாரின் கூட்டாளிகள் தப்பி ஓடிவிட்டனர். அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட ஆதித்யன், அமைந்தகரையில் நடைபெற்ற ஒரு கொலை வழக்கில் தொடர்புடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story