பயணிகளுக்கு சேவை செய்ய சென்னை விமான நிலையத்தில் 2 ரோபோக்கள் அறிமுகம் 3 மாத சோதனைக்கு பிறகு நிரந்தரமாக்க திட்டம்


பயணிகளுக்கு சேவை செய்ய சென்னை விமான நிலையத்தில் 2 ரோபோக்கள் அறிமுகம் 3 மாத சோதனைக்கு பிறகு நிரந்தரமாக்க திட்டம்
x
தினத்தந்தி 16 Aug 2018 4:45 AM IST (Updated: 16 Aug 2018 2:57 AM IST)
t-max-icont-min-icon

சென்னை விமான நிலையத்தில் பயணிகளுக்கு சேவை செய்வதற்காக 2 ரோபோக்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஆலந்தூர், 

சென்னை விமான நிலையத்தில் பயணிகளுக்கு சேவை செய்வதற்காக 2 ரோபோக்கள் சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்த உள்ளது. 3 மாத சோதனைக்கு பிறகு அதை நிரந்தரமாக செயல்படுத்தப்படும் என சென்னை விமான நிலைய ஆணையக அதிகாரி தெரிவித்தார்.

ரோபோ பயன்படுத்த முடிவு

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவ்வாறு வரும் பயணிகள் பாதுகாப்பு சோதனை, விமான டிக்கெட் பரிசோதனை, உடைமைகள் சோதனை செய்யும் இடங்கள், விமான நிலையம் உள்ளே சென்றதும் விமானங்கள் குறித்த தகவல்களை அறிந்து கொள்ள விமான சேவை மையம் செயல்பட்டது.

அதற்கு பதிலாக சென்னை விமான நிலையத்தில் ரோபோவை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக பெங்களூருவில் இருந்து 2 ரோபோக்கள் பரிசோதனைக்காக 3 மாதங்களுக்கு வாடகை அடிப்படையில் பெறப்பட்டு உள்ளன.

அந்த ரோபோக்கள் சென்னை விமான நிலைய உள்நாட்டு முனையம் வருகை மற்றும் புறப்பாடு முனையங்களில் 3 மாதங்களுக்கு சோதனை அடிப்படையில் பயன்படுத்தப்பட உள்ளது.

அறிமுகம்

இந்தநிலையில் நேற்று சுதந்திர தினவிழா என்பதால் அந்த ரோபோக்கள் மூலம் விமான நிலையம் வரும் பயணிகளுக்கு சுதந்திர தினவிழா வாழ்த்து தெரிவித்து, இனிப்புகள் வழங்க அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.

சென்னை விமான நிலைய ஆணையக இயக்குனர் சந்திரமவுலி தலைமையிலான அதிகாரிகள் இதை தொடங்கி வைத்தனர். அந்த ரோபோக்கள் விமான நிலையம் வந்த மாணவ-மாணவிகள், குழந்தைகள், பயணிகளை வரவேற்று அவர்களுக்கு இனிப்புகள் வழங்கி, சுதந்திர தின வாழ்த்துகளை தெரிவித்தது.

இதை கண்டு மகிழ்ச்சி அடைந்த பயணிகள் மற்றும் குழந்தைகள் பதிலுக்கு ரோபோக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இது குறித்து சென்னை விமான நிலைய ஆணையக இயக்குனர் சந்திரமவுலி கூறியதாவது:-

நிரந்தரமாக்கப்படும்

தற்போது அந்த ரோபோக்களில் பயணிகளின் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வகையில் விமானத்தில் செல்ல எந்த கவுண்ட்டருக்கு செல்லவேண்டும். விமான நேரங்கள், பாதுகாப்பு சோதனை, விமான டிக்கெட் பரிசோதனை நடைபெறும் இடங்கள் உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்யும் பணி நடைபெறுகிறது. இன்னும் 3 நாட்களில் அந்த பணிகள் முடிவடைந்து விடும். அதன்பிறகு ரோபோக்கள் சோதனை அடிப்படையில் பயன்படுத்தப்படும்.

இந்த ரோபோக்களுக்கு பயணிகள் மத்தியில் உள்ள வரவேற்பு மற்றும் அதன் செயல்பாடுகளை பொறுத்து சென்னை உள்நாடு மற்றும் பன்னாட்டு விமான நிலையங்களில் பயணிகளுக்கு சேவை செய்ய இவை நிரந்தரமாக பயன்படுத்தப்படும்.

இந்திய விமான நிலைய ஆணையகத்தின் கீழ் செயல்படும் விமான நிலையங்களில் முதல் முறையாக சென்னை விமான நிலையத்தில் பயணிகளுக்கு சேவை செய்ய ரோபோக்கள் பயன்படுத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story