சுதந்திர தினத்தையொட்டி அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் கிராம சபை கூட்டம்


சுதந்திர தினத்தையொட்டி அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் கிராம சபை கூட்டம்
x
தினத்தந்தி 16 Aug 2018 4:00 AM IST (Updated: 16 Aug 2018 3:05 AM IST)
t-max-icont-min-icon

சுதந்திர தினத்தையொட்டி அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

அரியலூர்,

சுதந்திர தினவிழாவையொட்டி அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடந்தது. அரியலூர் ஊராட்சி ஒன்றியம், மணக்கால் கிராமத்தில் நடைபெற்ற கிராம சபைக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி கலந்து கொண்டு பொதுமக்களிடையே கலந்துரையாடினர்.

குன்னம் வட்டம், மங்களமேடு பகுதியில் உள்ள ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம் நடந்தது. வதிஷ்டபுரத்தில் ஊராட்சி செயலாளர் பழனிவேல், வயலூரில் சுமதி, அத்தியூரில் முருகதாஸ், திருமாந்துறையில் வீரமணி, கீழப்பெரம்பலூரில் சட்டநாதன், கீழப்புலியூரில் ராஜா ஆகியோர் தலைமையிலும் எறையூர், வாலிகண்டபுரம், தேவையூர், அனுக்கூர் உள்பட 15-க்கும் மேற்பட்ட கிராமங்களில் கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றன. கூட்டத்தில் பெண்களுக்கு நோய் தடுப்பு நடவடிக்கைகள், ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத குழந்தைகள் மற்றும் பாலியல் விகிதாச்சாரம் வேறுபாடு இல்லாத ஊராட்சியை உருவாக்குதல், சுய உதவிக்குழு மூலம் சமூக அங்கீகாரம் அளித்து சமூக வன்முறைகள் இல்லாத கிராமத்தை உருவாக்குதல், கல்வி அறிவு பெரும் பெண்களின் சதவிகிதத்தை அதிகரித்தல், மகளிர் பாதுகாப்பு, கிராம வளர்ச்சி தொடர்பான குழுக்கள் அமைத்தல், குழந்தை திருமணம் மற்றும் தடுப்பு கண்காணிப்பு குழு அமைத்தல் குறித்து விவாதிக்கப்பட்டது. பெண்களை வலிமைப்படுத்து தேசிய கொள்கை, மகளிர் உரிமைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. மேலும் பொதுசுகாதாரம், வன்முறை தடுப்பு சமூக பாதுகாப்பு அதிகார பதிவு பொதுவினியோகம், அங்கன்வாடி மையங்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலம், குறித்து விவாதிக்கப்பட்டது.

பெரம்பலூர் மாவட்டத்தில் சுதந்திர தினவிழாவை முன்னிட்டு 121 ஊராட்சிகளிலும் நேற்று கிராம சபைக்கூட்டம் நடைபெற்றது. பெரம்பலூர் ஒன்றியம், நொச்சியம் ஊராட்சியில் நடந்த கிராமசபை கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலெக்டர் சாந்தா கலந்துகொண்டு முழு சுகாதாரத்திட்டத்தின் கீழ் தனிநபர் இல்ல கழிவறைகளை முறையாக பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் வகையில் 3 பேருக்கு ஊக்கத்தொகைகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார். இந்த கூட்டத்தில் கிராமத்தில் நிறைவேற்றப்பட்ட வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் வளர்ச்சிப்பணிகள், நடப்பு ஆண்டில் மேற்கொள்ளப்பட உள்ள பணிகள், ஊராட்சியில் குடிநீர் வழங்கும் பணி, சுகாதாரம், பால் உற்பத்தி, தெரு விளக்குகள், குழந்தைகள் மைய செயல்பாடு, அடிப்படை கட்டமைப்பு வசதிகள், கழிப்பிட வசதி, விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம், ரேஷன் கடைகளில் பொருட்கள் இருப்பு, பசுமை வீடுகள் திட்டப்பணிகள் குறித்து பொதுமக்களுடன் விவாதிக்கப்பட்டது. இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஸ்ரீதர், பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் விஸ்வநாதன், ஊராட்சிகள் உதவி இயக்குனர் பாரதிதாசன், தாசில்தார் பாரதிவளவன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story