இரும்புக் கம்பியால் அடித்து வாலிபர் கொலை
வந்தவாசியில் கடன் தகராறில் வாலிபர் இரும்புக் கம்பியால் அடித்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
வந்தவாசி,
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி நகரில் உள்ள கோட்டைக்குள தெருவைச் சேர்ந்தவர் சலீம் (வயது 35). இவர் பழைய இரு சக்கர வாகனங்களை வாங்கி விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வந்தார். இவரிடம் வந்தவாசி தீயணைப்பு நிலையத்தின் பின்புற தெருவில் வசிக்கும் ஆட்டோ டிரைவர் நரேஷ் (29) என்பவர் ரூ.3ஆயிரம் கடனாக வாங்கியதுடன், கடந்த 2 மாதங்களாக திருப்பி தராமல் இருந்துள்ளார். இதனால் சலீம், பணத்தை திருப்பி தரும்படி நரேசிடம் கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வந்தவாசி பழைய பஸ் நிலையம், அம்பேத்கர் சிலை அருகில் உள்ள ஆட்டோ நிறுத்தத்தில் நரேஷ் ஆட்டோவுடன் நின்று இருந்தார். அப்போது அங்கு சென்ற சலீம் தனக்கு சேர வேண்டிய ரூ.3 ஆயிரத்தை தரும்படி கேட்டாராம். இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
ஆத்திரம் அடைந்த நரேஷ், ஆட்டோவில் இருந்த இரும்புக் கம்பியை எடுத்து சலீமின் தலை மீது தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயம் அடைந்த சலீம் வந்தவாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். பின்னர் அவர் சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று மதியம் சலீம் இறந்து விட்டார்.
இதுபற்றி அவரது சகோதரர் ஜாகீர்உசேன் வந்தவாசி தெற்கு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் (பொறுப்பு), சப்- இன்ஸ்பெக்டர் வரதராஜன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து நரேசை கைது செய்து வந்தவாசி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரை மாஜிஸ்திரேட் நிலவரசன் 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டதை தொடர்ந்து வேலூர் மத்திய ஜெயிலில் நரேஷ் அடைக்கப்பட்டார். கொலை செய்யப்பட்ட சலீமிற்கு மனைவி 3குழந்தைகள் உள்ளனர்.
Related Tags :
Next Story