ஓடும் ரெயிலில் கோவையை சேர்ந்த பெண்ணிடம் சில்மிஷம்


ஓடும் ரெயிலில் கோவையை சேர்ந்த பெண்ணிடம் சில்மிஷம்
x
தினத்தந்தி 15 Aug 2018 9:56 PM GMT (Updated: 15 Aug 2018 9:56 PM GMT)

ஓடும் ரெயிலில் கோவை பெண்ணிடம் சில்மிஷம் செய்த கேரள வாலிபரை ரெயில்வே போலீசார் கைது செய்தனர். பாதிக்கப்பட்ட பெண் ரெயில்வே துறை எண்ணில் அளித்த புகாரையடுத்து போலீசார் அதிரடியாக இந்த நடவடிக்கையை எடுத்தனர்.

ஜோலார்பேட்டை, 


மத்திய பிரதேச மாநிலம் இந்தூரிலிருந்து திருவனந்தபுரத்திற்கு செல்லும் ‘அகில்யாநகரி’ என்ற வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 22645) நேற்று முன்தினம் நள்ளிரவு சித்தூரை கடந்து காட்பாடியை நோக்கி வந்து கொண்டிருந்தது. அந்த ரெயிலில் கோவையை சேர்ந்த 22 வயது பெண் பொதுப்பெட்டியில் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது அவருக்கு அருகே அமர்ந்திருந்த வாலிபர் ஒருவர் அந்த பெண்ணை சில்மிஷம் செய்தவாறே வந்தார். அந்த பெண் கண்டித்தும் அந்த வாலிபர் பொருட்படுத்தவில்லை.

ஓடும் ரெயிலில் இதுபோன்று யாராவது சில்மிஷம் செய்தால் பாதிக்கப்பட்ட பெண்கள் 1512 என்ற எண் மூலம் ரெயில்வே கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டால் உடனடியாக ரெயில்வே போலீசார் நடவடிக்கை எடுத்து குற்றச்செயல்களை தடுப்பர். இதனை அறிந்திருந்த அந்த பெண் 1512 என்ற எண் மூலம் ரெயில்வே கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு புகார் அளித்தார்.

கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் விசாரித்தபோது தான் 22645 என்ற அகில்யாநகரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் கோவைக்கு சென்று கொண்டிருப்பதாக கூறினார். அந்த ரெயில் காட்பாடிக்கு வந்திருக்கலாம் என கருதி அதிகாரிகள் காட்பாடி ரெயில்வே போலீசாரை தொடர்பு கொண்டபோது ரெயில் புறப்பட்டு விட்டதாக தெரிவித்தனர்.

இதனையடுத்து கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசாரை தொடர்பு கொண்டு அது குறித்த விவரத்தை கூறினர். இந்த நிலையில் ரெயில் நேற்று அதிகாலை 3 மணியளவில் ஜோலார்பேட்டையை வந்தடைந்தது. அங்கு தயாராக நின்று கொண்டிருந்த ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகாமிராணி தலைமையிலான போலீசார் கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் தெரிவித்தபடி என்ஜினுக்கு அடுத்ததாக 2-வதாக உள்ள பொதுப்பெட்டியில் ஏறினர்.

அங்கு புகார் செய்த பெண்ணை செல்போனில் தொடர்புகொண்டு தேடிப்பிடித்தபோது அந்த பெண் தன்னை சில்மிஷம் செய்த வாலிபரை அடையாளம் காட்டி புகார் அளித்தார். உடனே அந்த வாலிபரை ரெயில்வே போலீசார் பிடித்து கீழே இறக்கினர். விசாரணையில் அந்த வாலிபர் கேரள மாநிலம் புல்லூரை சேர்ந்த சேதுபாய் மகன் நவாஸ் (வயது 32) என்பது தெரியவந்தது. அவரை ரெயில்வே போலீசார் கைது செய்து திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். 

Next Story