புதுக்கோட்டையில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்: தேசிய கொடியை கலெக்டர் கணேஷ் ஏற்றி வைத்தார்


புதுக்கோட்டையில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்: தேசிய கொடியை கலெக்டர் கணேஷ் ஏற்றி வைத்தார்
x
தினத்தந்தி 16 Aug 2018 4:30 AM IST (Updated: 16 Aug 2018 3:27 AM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டையில் நடந்த சுதந்திர தின விழாவில் தேசிய கொடியை கலெக்டர் கணேஷ் ஏற்றி வைத்தார். மேலும் மாணவ–மாணவிகளின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடந்தது.

புதுக்கோட்டை,

இந்தியா முழுவதும் நேற்று சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. இதன் ஒருபகுதியாக புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்திலும் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. விழாவில் கலெக்டர் கணேஷ் கலந்து கொண்டு காலை 9.20 மணியளவில் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் திறந்த ஜீப்பில் சென்று போலீசார், தீயணைப்பு வீரர்கள், என்.சி.சி. மாணவர்கள் உள்ளிட்டோர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். அதன் பிறகு சமாதான புறாக்கள் பறக்கவிடப்பட்டன. பின்னர் கலெக்டர் கணேஷ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ், மாவட்ட வருவாய் அதிகாரி ராமசாமி ஆகியோர் வண்ண பலூன்களை பறக்க விட்டனர்.

பின்னர் சுதந்திர போராட்ட தியாகிகளை கவுரவிக்கும் வகையில், தியாகிகளுக்கு கதர் ஆடைகளை கலெக்டர் கணேஷ் அணிவித்தார். பின்னர் வருவாய்த்துறை, வேளாண்மைத்துறை, சமூக நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, தோட்டக்கலைத்துறைகளின் சார்பில் 63 பயனாளிகளுக்கு ரூ.7 லட்சத்து 28 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் கணேஷ் வழங்கினார்.

தொடர்ந்து காவல்துறை, வருவாய்த்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, புவியியல் மற்றும் சுரங்கத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, கருவூலத்துறை, சுகாதாரத்துறை, தொழிலாளர் நலத்துறை, வேளாண்மைத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, நில அளவை பதிவேடுகள் துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்துறை, பள்ளிக் கல்வித்துறை உள்பட பல்வேறு துறைகளை சேர்ந்த 211 அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் கணேஷ் வழங்கினார்.

பின்னர் 11 பள்ளிகளை சேர்ந்த 800 மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட கண்கவர் கலைநிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இலுப்பூர் மதர்தெரசா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியும், புதுக்கோட்டை வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியும் முதல் பரிசை பெற்றனர். இதேபோல கந்தர்வகோட்டை வித்யா விகாஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியும், கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியும் 2–வது பரிசை பெற்றனர். புதுக்கோட்டை லேணாவிளக்கு மவுண்ட் சீயோர் சி.பி.எஸ்.சி. பள்ளியும், அறந்தாங்கி லாரல் மேல்நிலைப்பள்ளியும் 3–வது பரிசை பெற்றனர். பின்னர் கலைநிகழ்ச்சியில் கலந்து கொண்ட பள்ளிகளுக்கும், பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இறுதியில் நாட்டுப்பண் பாடப்பட்டு விழா நிறைவுபெற்றது.

இதில் மாவட்ட வருவாய் அதிகாரி ராமசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சந்தோஷ்குமார், புதுக்கோட்டை நகராட்சி ஆணையர் (பொறுப்பு) சுப்பிரமணியன், தாசில்தார் தமிழ்மணி உள்பட அனைத்து துறை அரசு அலுவலர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் உள்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக விழாவிற்கு வருகை தந்த அனைவரும் பலத்த சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர்.

இதைப்போல புதுக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. இதில் நகராட்சி ஆணையர் (பொறுப்பு) சுப்பிரமணியன் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் நகராட்சி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. இதில் நகராட்சி மேலாளர், வருவாய் அலுவலர், உதவி செயற்பொறியாளர், நகர்நல அலுவலர், சுகாதார ஆய்வாளர்கள், வருவாய் அலுவலர்கள், நகராட்சி பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதைப்போல புதுக்கோட்டையில் உள்ள ராணியார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, ராணியார் அரசு உயர்நிலைப்பள்ளி, சந்தைப்பேட்டை நகராட்சி நடுநிலைப்பள்ளி, அரசு உயர் தொடக்கப்பள்ளி, பிரகதாம்பாள் அரசு மேல்நிலைப்பள்ளி, பாலன்நகர் தொடக்கப்பள்ளி உள்பட அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள், புதுக்கோட்டை தாசில்தார் அலுவலகம், தீயணைப்பு நிலையம் உள்பட அனைத்து அரசு அலுவலகங்களிலும் சுதந்திர தினவிழாவையொட்டி தேசிய கொடி ஏற்றப்பட்டு, மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து அரசு பள்ளிகளில் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.


Next Story