குடிபோதையில் தகராறு செய்த வாலிபர் வெட்டிக்கொலை
வேலூர் அருகே குடிபோதையில் தகராறு செய்த வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவரது அண்ணனை போலீசார் கைது செய்தனர்.
வேலூர்,
இந்த கொலை சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
வேலூரை அடுத்த ஊசூர் வீராரெட்டிபாளையத்தை சேர்ந்தவர் குமார். இவருடைய மனைவி ஜெயகுமாரி. இவர்களின் மகன்கள் செந்தில் (வயது 29), ராஜேஷ் (24). இருவரும் கூலிதொழிலாளிகள். ராஜேஷ்க்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாகவும், அவர் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து அடிக்கடி தகராறில் ஈடுபடுவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் காலையிலேயே ராஜேஷ் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து தகராறு செய்துள்ளார். அதனை செந்தில் தட்டிக்கேட்டுள்ளார். இது தொடர்பாக இருவருக்கும் இடையே வாய்தகராறு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து சிறிது நேரத்தில் ராஜேஷ் வீட்டை விட்டு வெளியேறினார்.
பின்னர் அவர் டாஸ்மாக் கடைக்கு சென்று மீண்டும் மது குடித்து விட்டு இரவு வீடு திரும்பினார். அதனால் அண்ணன்-தம்பிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த செந்தில் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து ராஜேஷின் கழுத்து, வயிற்றில் சரமாரியாக வெட்டினார். இதில், படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்த அவரை குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஊசூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. கத்தி வெட்டு பலமாக காணப்பட்டதால் ராஜேஷ் மேல்சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து உடல் பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதுதொடர்பாக அரியூர் போலீசில் ஜெயகுமாரி புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து நேற்று காலை செந்திலை கைது செய்தனர்.
வேலூர் அருகே குடிபோதையில் தகராறு செய்த தம்பியை கத்தியால் அண்ணன் வெட்டிக்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story