தாமிரபரணி ஆற்றில் வெள்ளம்: 4 இடங்களில் தயார் நிலையில் மீட்பு குழு


தாமிரபரணி ஆற்றில் வெள்ளம்: 4 இடங்களில் தயார் நிலையில் மீட்பு குழு
x
தினத்தந்தி 16 Aug 2018 3:59 AM IST (Updated: 16 Aug 2018 3:59 AM IST)
t-max-icont-min-icon

தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் நெல்லை மாவட்டத்தில் 4 இடங்களில் பேரிடர் மீட்பு குழு தயார் நிலையில் உள்ளதாக, கலெக்டர் ஷில்பா தெரிவித்தார்.

நெல்லை, 


இது குறித்து அவர் நெல்லையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

நெல்லை மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் நீர் பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால் அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து வருவதால், அணைகளின் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. இதனால் நேற்று முன்தினம் இரவு பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 16 ஆயிரம் தண்ணீர் வந்தது. அணையின் பாதுகாப்பு கருதி தாமிரபரணி ஆற்றில் வினாடிக்கு 15 ஆயிரம் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதை தொடர்ந்து தாமிரபரணி கரையோர பகுதி மக்களுக்கு வெள்ளஅபாய எச்சரிக்கை விடப்பட்டது.

இன்று (அதாவது நேற்று காலை) காலை நிலவரப்படி பாபநாசம் அணைக்கு தண்ணீர் வரத்து குறைந்துள்ளது. அதனால் அணையில் இருந்து வினாடிக்கு 7 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. கரையோர மக்கள் அச்சப்பட தேவையில்லை.

அதேசமயம் தாமிரபரணி ஆற்றில் குளிக்கவோ, ஆற்றில் இறங்கவோ வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். பாபநாசம், அம்பை, பாளையங்கோட்டை, நெல்லை ஆகிய 4 இடங்களில் பேரிடர் மீட்பு குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழுவில் வருவாய்த்துறை, காவல்துறையும் இடம் பெற்றுள்ளனர். அவர்கள் மக்களை கண்காணித்து வருகிறார்கள். இந்த குழு 24 மணி நேரமும் தயார் நிலையில் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story