நெல்லை மாவட்டத்தில் பலத்த மழை: வெள்ளத்தில் சிக்கிய 21 பக்தர்கள் பத்திரமாக மீட்பு


நெல்லை மாவட்டத்தில் பலத்த மழை: வெள்ளத்தில் சிக்கிய 21 பக்தர்கள் பத்திரமாக மீட்பு
x
தினத்தந்தி 16 Aug 2018 4:17 AM IST (Updated: 16 Aug 2018 4:17 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வருவதால் பாவூர்சத்திரம் அருகே கோவிலுக்கு சாமி கும்பிட சென்ற 21 பக்தர்கள் வெள்ளத்தில் சிக்கி தவித்தனர். அவர்களை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர். நெற்பயிர்கள் மூழ்கின. போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

ஏர்வாடி, 



நெல்லை மாவட்டம் ஏர்வாடி அருகே திருக்குறுங்குடி மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நம்பியாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. கொடுமுடியாறு அணை நிரம்பியதால், அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே வள்ளியூரான் கால்வாய், படலையான் கால்வாய், நம்பியாறு கால்வாய்களில் வெளியேற்றப்பட்டு வருகிறது. தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் அவசர கால ஷட்டர் வழியாகவும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
திருக்குறுங்குடி சப்பாத்து பகுதியில் நம்பியாற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. இதனால் திருமலைநம்பி கோவிலுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஏர்வாடி அருகே உள்ள அணைக்கரை-சிறுமளஞ்சி கிராமங்களை இணைக்கும் தாம்போதி பாலம் கடந்த ஆண்டு மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் முற்றிலும் இடிந்து விழுந்தது. இதனால் தற்போது இரும்பால் ஆன தற்காலிக பாலம் அமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர்.

இந்தநிலையில் தற்போது நம்பியாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்காலும், கொடிமுடியாறு அணை நிரம்பி தண்ணீர் வெளியேறுவதாலும் தற்காலிக இரும்பு பாலம் சேதமடைந்தது. இதனால் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் பெரிதும் அவதி அடைந்தனர்.

களக்காடு தலையணையில் வெள்ளம்

களக்காடு தலையணையில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் தலையணைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் உப்பாறு, நாங்குநேரியான் கால்வாய், பச்சையாற்றிலும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. களக்காடு-நாகர்கோவில் சாலையில் பாலம் கட்டுமான பணிகள் நடப்பதால் நாங்குநேரியான் கால்வாயில் செல்லும் தண்ணீர் உப்பாற்றில் திருப்பி விடப்பட்டுள்ளது.

களக்காடு தாமரைகுளத்தின் நடுமடை அருகே கரையில் அரிப்பு ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து, குளம் உடையும் அபாயம் ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் பொதுப்பணித்துறையினர் மணல் மூட்டைகளை அடுக்கி தற்காலிக சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நெற்பயிர்கள் மூழ்கின

தென்காசி அருகே மேக்கரை அடவிநயினார் அணை நிரம்பி வழிவதால் எருமைச்சாடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வடகரை, கரிசல் குடியிருப்பு பகுதிகளில் உள்ள தென்னந்தோப்பு, வாழை தோப்பு மற்றும் வயல்களுக்கு சென்று தண்ணீர் தேங்கியது. இதனால் சுமார் 300 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் வெள்ளத்தால் சூழ்ந்துள்ளன. சுமார் 3000 வாழைகள், 2000 தென்னை மரங்கள் வெள்ளத்தில் சிக்கியுள்ளன. கார் சாகுபடிக்காக முதல் முறை அணை நிரம்பிய போது விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். தற்போது 2-வது முறையாக அணை நிரம்பி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பயிர்கள் சேதமடைகின்றன.

கடையநல்லூர் கருப்பாநதி அணைக்கட்டு பகுதியில் அதிகளவு மழை பெய்தது. இதனால் அணைக்கு வரும் 1,400 கனஅடி தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுவதால் பாப்பான் கால்வாய், சீவலான் கால்வாய், தேவர் கால்வாய் ஆகிய பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கரையோரம் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்தது. பெரியாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. வெள்ளம் பாதித்த பகுதிகளை முகமது அபுபக்கர் எம்.எல்.ஏ., தாசில்தார் தங்கராஜ் ஆகியோர் பார்வையிட்டார்.


பாவூர்சத்திரம் அருகே கீழப்புலியூர் பெரியகுளத்தில் கரை உடையும் அபாயம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் விரைந்து வந்து பார்வையிட்டனர்.
பின்னர் உடனடியாக மணல் மூட்டைகளை கொண்டு சரிசெய்தனர். செங்கோட்டை அருகே புளியரை, கட்டளைகுடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு, சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் ரோட்டில் சென்றவர்கள் மீது வாகனங்கள் தண்ணீரை வாரி இறைத்தன.

பாவூர்சத்திரம் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 21 பேர் ஒரு வேனில் நேற்று காலை கருப்பாநதி அணையின் அருகே ஆற்றுப்படுகையில் உள்ள பெரியநாயகம் கோவிலுக்கு சென்றனர். மழையின் காரணமாக தண்ணீர் வரத்து அதிகரித்து, 72 அடி கொள்ளளவு கொண்ட கருப்பாநதி அணை நிரம்பியது. இதனால் அணைக்கு வரும் 900 கனஅடி தண்ணீர் அப்படியே திறந்துவிடப்பட்டதால் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் கோவிலுக்கு சென்றவர்கள் திரும்பி வர முடியாமல் சிரமப்பட்டனர்.

இதுகுறித்த தகவல் அறிந்ததும் பொதுப்பணித்துறை அதிகாரிகள், அணையில் இருந்து தண்ணீர் திறப்பை குறைத்தனர். மாவட்ட தீயணைப்பு நிலைய அலுவலர் மகாலிங்க மூர்த்தி தலைமையில் கடையநல்லூர், வாசுதேவநல்லூர் தீயணைப்பு நிலைய அலுவலர்கள் விரைந்து சென்றனர். பின்னர் வெள்ளத்தில் சிக்கிய 21 பக்தர்களையும் கயிறு கட்டி பத்திரமாக மீட்டனர். 

Next Story