ஆன்-லைனில் மதுபானம் விற்பனை: 50 மது கடைகளுக்கு ‘சீல்’ வைப்பு - ஒருவர் கைது


ஆன்-லைனில் மதுபானம் விற்பனை: 50 மது கடைகளுக்கு ‘சீல்’ வைப்பு - ஒருவர் கைது
x
தினத்தந்தி 16 Aug 2018 4:25 AM IST (Updated: 16 Aug 2018 4:25 AM IST)
t-max-icont-min-icon

ஆன்-லைனில் மதுபானங்களை விற்பனை செய்த 50 கடைகளுக்கு கலால்துறை சீல் வைத்தது. இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.

மும்பை,

மும்பை, நவிமும்பை, தானே மற்றும் ராய்காட் ஆகிய இடங்களில் உள்ள மதுபான கடைகள் சட்டவிரோதமாக ஆன்-லைனில் மதுபானங்களை விற்பனை செய்து வருவதாக கலால்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அதிகாரிகள் மேற்கண்ட இடங்களில் தனித்தனி குழுக்களாக சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த சோதனையின் போது, விதிமுறைகளை மீறி ஆன்-லைன் மூலம் 50 மதுபான கடைகள் மதுபானங்களை விற்பனை செய்து வந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அந்த கடைகள் அனைத்தையும் கலால்துறை அதிகாரிகள் அதிரடியாக இழுத்து மூடி சீல் வைத்தனர்.


இதில் தென்மும்பை நேப்பின் சீ சாலையில் உள்ள மோக்சா ஒயின் என்ற கடையில் வேலை பார்த்து வந்த வாலிபர் அம்ரேஷ் சாகு (வயது28). இவர் வாடிக்கையாளர் ஒருவரின் வீட்டுக்கு ஒயினை வினியோகம் செய்ய சென்ற போது அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

அவர் கொடுத்த தகவலின் பேரில் அதிகாரிகள் ஜூகுவில் உள்ள லிவிங் லிக்யூட் என்ற கடையில் சோதனை நடத்தினர். அப்போது, வீட்டிற்கு கொண்டு சென்று சப்ளை செய்வதற்காக வைக்கப்பட்டு இருந்த மதுபானங்கள் கைப்பற்றப்பட்டன. இதற்கிடையே அந்த கடை உரிமையாளர் மானிஷ் என்பவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

சட்டவிரோதமாக ஆன்-லைனில் மதுபானங்களை விற்பனை செய்யும் கடைகளுக்கு எதிராக தொடர்ந்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலால்துறை அதிகாரிகள் எச்சரித்து உள்ளனர்.

Next Story