கூடலூரில் தொடரும் கனமழை; வீடு இடிந்து ஒருவர் படுகாயம்


கூடலூரில் தொடரும் கனமழை; வீடு இடிந்து ஒருவர் படுகாயம்
x
தினத்தந்தி 17 Aug 2018 4:45 AM IST (Updated: 17 Aug 2018 12:25 AM IST)
t-max-icont-min-icon

கூடலூரில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதையொட்டி வீடு இடிந்து ஒருவர் படுகாயம் அடைந்தார்.

கூடலூர்,

கூடலூரில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மரப்பாலம் அருகே புளியாம்பாரா ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த வெள்ளத்தில் சிக்கி ஆடு ஒன்று அடித்து செல்லப்பட்டது. அதனை மீட்க மக்கள் முயன்றும், முடியவில்லை. மேலும் தேயிலை தோட்டங்களுக்குள் மழை வெள்ளம் புகுந்தது. புத்தூர்வயல் அருகே தேன்வயல் ஆதிவாசி கிராமத்தை நேற்று முன்தினம் நள்ளிரவில் மீண்டும் வெள்ளம் சூழ்ந்தது. 2-வது நாளாக புத்தூர்வயல் அரசு பள்ளிக்கூடத்திலேயே அந்த கிராம மக்கள் தங்கி உள்ளனர்.

பந்தலூர் அருகே அம்பலமூலா படிக்கன்வயல் சாலையில் பொதுமக்களின் குடியிருப்பு அருகில் மண்சரிவு ஏற்பட்டது. ஏற்கனவே மணி என்பவர் வீட்டின் பின்புறம் மண்சரிவு ஏற்பட்டிருந்தது. இதையொட்டி பாதுகாப்பு கருதி அந்த பகுதியை சேர்ந்த 21 பேர் அம்பலமூலா அரசு தொடக்கப்பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை திராவிடமணி எம்.எல்.ஏ., பந்தலூர் தாசில்தார்(பொறுப்பு) சரவணன், வருவாய் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி, கிராம நிர்வாக அலுவலர் கர்ணன் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். கூடலூர்- மைசூரு சாலையில் மரப்பாலம் என்ற இடத்தில் மோகன் என்பவரது வீட்டின் பின்புறம் மண் சரிவு ஏற்பட்டது. இதனால் அவரது வீட்டின் முன்பு மண் குவிந்தது. இதனால் வீட்டிற்குள் செல்ல முடியாத நிலை உள்ளது.

ஏற்கனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மோகன் மற்றும் அவரது குடும்பத்தினர் நேற்று முன்தினம் இரவே வீட்டில் இருந்து வெளியேறி உறவினர் வீட்டில் தஞ்சம் அடைந்தனர். இதையடுத்து அங்கு வருவாய்த்துறையினர் நேரில் சென்று பார்வையிட்டனர். பின்னர் நகராட்சி ஊழியர்கள் மண் குவியலை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். கெவிப்பாரா, சின்னசூண்டி, காந்தி நகர், பொன்னூர் ஆகிய பகுதிகளில் 5 வீடுகளின் சுவர்கள் இடிந்து விழுந்தன. பெரிய சூண்டியில் செல்வராஜ் என்பவரது ஓட்டு வீடு இடிந்தது. அப்போது வீட்டிற்குள் இருந்த அவர் படுகாயம் அடைந்தார். கூடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

ஊட்டியில் பலத்த காற்றுடன் மழை பெய்வதால் ஆங்காங்கே மரங்கள் முறிந்து சாலையின் குறுக்கே விழுந்து போக்குவரத்து பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்வதால் அணைகளுக்கு வரும் தண்ணீர் வரத்தை பொருத்து, வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவும் அதிகரிக்கப்படுகிறது. இதனால் கால்வாய்கள் மற்றும் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. கரையோரப்பகுதிகளில் வசித்து வரும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

தொடர் மழையால் சாலையோரங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் மண் எப்போதும் ஈரப்பதமாக இருக்கிறது. பலத்த காற்று வீசும் போது மரங்கள் முறிந்து விழுந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் பலத்த காற்று காரணமாக ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் பழமை வாய்ந்த ஒரு மரத்தின் மரக்கிளை முறிந்து சாலையின் குறுக்கே விழுந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த ஊட்டி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று மரக்கிளையை வெட்டி அகற்றினார்கள்.

ஊட்டியில் நேற்று பகலில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. சாரல் மழை விட்டு, விட்டு பெய்து கொண்டே இருந்தது. தொடர் மழையால் ஊட்டி-இத்தலார் சாலை முள்ளிக்கொரை பகுதியில் இரண்டு மரங்கள் வேருடன் முறிந்து சாலையின் குறுக்கே விழுந்தன. இதில் ஒரு மரம் மின் ஒயர்கள் மீது விழுந்ததால், மின்கம்பம் ஒன்று சாய்ந்தது. உடனே மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. மேலும் ஊட்டி-கூடலூர் சாலை தலைகுந்தா பகுதியில் மரம் ஒன்று முறிந்து சாலையின் குறுக்கே விழுந்தது. இந்த மரங்கள் மின்வாள்கள் மூலம் வெட்டி சாலையில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டது.

ஊட்டி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளான நஞ்சநாடு, முத்தோரை, தலைகுந்தா, தூனேரி, அணிக்கொரை, இடுஹட்டி, லவ்டேல், கேத்தி உள்ளிட்ட இடங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. சில இடங்களில் விளைநிலங்களில் பயிரிடப்பட்டு இருந்த காய்கறி பயிர்களை மழைநீர் சூழ்ந்து உள்ளது. ஊட்டி அருகே முத்தோரை எம்.பாலாடா கிராமத்தின் நடுவே செல்லும் கால்வாயில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இருகரைகளையும் தொட்டபடி தண்ணீர் சீறிப்பாய்ந்து செல்கிறது.

போர்த்தியாடா நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்வதால், அங்கு நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது. இதனால் கேரட் உள்ளிட்ட காய்கறி பயிர்கள் தண்ணீருக்குள் மூழ்கும் நிலை உள்ளது. ஊட்டி கோடப்பமந்து அப்பர் அணையின் முழு கொள்ளளவான 12 அடியை எட்டி அணை நிரம்பி உள்ளது. இந்த அணையில் இருந்து வெளியேறும் தண்ணீர் டைகர்ஹில் அணைக்கு செல்கிறது.

Next Story