வெள்ளப்பெருக்கினால் தூணில் விரிசல் இடிந்து விழும் அபாய நிலையில் திருச்சி கொள்ளிடம் இரும்பு பாலம்


வெள்ளப்பெருக்கினால் தூணில் விரிசல் இடிந்து விழும் அபாய நிலையில் திருச்சி கொள்ளிடம் இரும்பு பாலம்
x
தினத்தந்தி 17 Aug 2018 4:45 AM IST (Updated: 17 Aug 2018 12:38 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கினால் இரும்பு பாலத்தின் ஆறாவது தூணில் ஏற்பட்ட விரிசல் அதிகமாகி ஆற்றுக்குள் இறங்கியது. இதனால் பாலம் எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாயம் உள்ளது.

திருச்சி,

கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கன மழையால் இந்த ஆண்டு மேட்டூர் அணை இரண்டு முறை அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. இதன் காரணமாக கர்நாடக அணைகளில் இருந்து வரும் தண்ணீர் அப்படியே காவிரியில் திறந்து விடப்பட்டு வருகிறது. கர்நாடகத்தில் இருந்து நேற்று மேட்டூர் அணைக்கு வினாடிக்கு ஒரு லட்சத்து 90 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது.மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர், திருச்சி மாவட்டம் முக்கொம்பு மேலணைக்கு நேற்று மாலை 4 மணி நிலவரப்படி வினாடிக்கு ஒரு லட்சத்து 64 ஆயிரத்து 210 கன அடியாக வந்தது. இங்கிருந்து காவிரியில் வினாடிக்கு 54 ஆயிரத்து 312 கன அடியும், கொள்ளிடத்தில் வினாடிக்கு 1 லட்சத்து 8 ஆயிரத்து 598 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டது. அதிகளவு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால், கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. காவிரி- கொள்ளிடம் ஆறுகளில் இரு கரைகளையும் தொட்டபடி தண்ணீர் சீறிப்பாய்ந்து செல்கிறது.

கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே திருவானைக்காவலையும், நம்பர் 1 டோல்கேட் பகுதிகளையும் இணைக்கும் விதத்தில் கடந்த 1928-ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட இரும்பு பாலம் உள்ளது.

90 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த பாலத்தின் தூண்கள் ஏற்கனவே வலுவிழந்த நிலையில் இருந்ததால் பஸ், லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டது. இதனால் இந்த பாலத்தின் அருகிலேயே புதிதாக கட்டப்பட்ட பாலத்தின் வழியாக போக்குவரத்து நடைபெற்று வருகிறது.

கொள்ளிடம் ஆற்றில் பேரிரைச்சலுடன் தண்ணீர் வேகமாக செல்வதால் கொள்ளிடம் பழைய பாலத்தில் சோதனைச்சாவடியில் இருந்து ஆறாவது தூணில் நேற்று முன்தினம் இரவு திடீரென விரிசல் ஏற்பட்டது. இதுபற்றிய தகவல் அறிந்ததும் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அங்கு வந்து பாலத்தின் இரு பகுதியையும் தடுப்பு கட்டைகள் மூலம் அடைத்து யாரும் நடந்து கூட செல்ல முடியாத வகையில் பாலத்தை முழுமையாக மூடினார்கள். பாலத்தின் மேல் பகுதியில் சென்று கொண்டிருந்த உயர் அழுத்த மின் பாதை வயர்களையும் துண்டித்தனர்.

நேற்று காலை பாலத்தின் தூணில் ஏற்பட்ட விரிசல் மேலும் அதிகரித்தது. இதனால் அந்த ஒரு தூண் மட்டும் அப்படியே சுமார் இரண்டு அடி ஆழத்திற்கு தண்ணீருக்குள் இறங்கியது. ஆறாவது தூண் தண்ணீருக்குள் இறங்கியதால் அதனுடன் இணைந்த ஐந்தாவது மற்றும் ஏழாவது தூண்களும் சற்று சாய்ந்த நிலையில் காணப்படுகிறது. இதனால் இந்த பாலம் எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. இதனை பார்ப்பதற்காக வந்த ஏராளமான பொதுமக்கள், புதிய பாலத்தில் நின்று வேடிக்கை பார்த்தனர்.

புதிய பாலம் வழியாக கார், வேன்களில் சென்ற வெளியூர் பயணிகளும் தங்களது வாகனங்களை நிறுத்திவிட்டு அபாய நிலையில் உள்ள தூணை பார்ப்பதற்காக சென்றனர். இதனால் புதிய பாலத்தில் நேற்று காலை முதல் மாலை வரை போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. போலீசார் ஒலிபெருக்கி மூலம் வாகனங்களை உடனுக்குடன் எடுத்து செல்லும்படி அறிவித்து கொண்டிருந்தனர்.

தமிழக சுற்றுலா துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர் வளர்மதி ஆகியோர் நேற்று புதிய பாலத்தில் நின்று பழைய இரும்பு பாலத்தில் விரிசல் ஏற்பட்ட தூணை பார்வையிட்டனர். பின்னர் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் நிருபர்களிடம் கூறுகையில், ‘கொள்ளிடம் இரும்பு பாலம் வலுவிழந்ததால், ஏற்கனவே மூடப்பட்டு விட்டது. ஜெயலலிதா ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட புதிய பாலத்தின் வழியாக தான் அனைத்து வாகனங்களும் செல்கின்றன. பழைய பாலம் இடிந்தாலும் புதிய பாலத்திற்கு எந்த வித அச்சுறுத்தலோ ஆபத்தோ வராது’ என்றார்.

திருச்சி மாவட்ட கலெக்டர் கே.ராஜாமணி கூறுகையில் ‘கொள்ளிடம் பழைய பாலம் ஏற்கனவே பயன்பாடற்ற நிலையில் தான் இருந்தது. கொள்ளிடம் ஆற்றில் இன்னும் கூடுதலாக அதாவது வினாடிக்கு 2 லட்சம் கன அடி வரை தண்ணீர் திறந்து விட வாய்ப்பு இருக்கிறது. நீர் வரத்து அதிகமாகும்போது அதிக சேதம் ஏற்படலாம். அப்படி ஒரு சூழல் ஏற்படும் போது பாலத்தை பழுதுபார்க்க முடியுமா? அல்லது நிரந்தரமாக இடித்து அப்புறப்படுத்தலாமா? என்பது பற்றி நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்கள் முடிவு செய்து அறிவிப்பார்கள். காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் அதிகமாக செல்லும் தண்ணீரால் திருச்சி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இனியும் ஏற்படப்போவது இல்லை. போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எல்லாம் ஒரு மாதத்திற்கு முன்பே எடுக்கப்பட்டு விட்டது’ என்றார். 

Next Story