தஞ்சை அருகே வெண்ணாற்றில் மூழ்கிய மாணவி பிணமாக மீட்பு


தஞ்சை அருகே வெண்ணாற்றில் மூழ்கிய மாணவி பிணமாக மீட்பு
x
தினத்தந்தி 17 Aug 2018 4:30 AM IST (Updated: 17 Aug 2018 12:45 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை அருகே வெண்ணாற்றில் மூழ்கிய பள்ளி மாணவி பிணமாக மீட்கப்பட்டார்.

தஞ்சாவூர்,

தஞ்சையை அடுத்த கூடலூர் நந்தவனத்தோட்டத்தை சேர்ந்தவர் குமார். இவருடைய மகள் வசந்தி (வயது15). இவர் 9-ம் வகுப்பு படித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவருடைய மகள் தர்ஷினி (13). 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.

தோழிகளான வசந்தியும், தர்ஷினியும் நேற்று முன்தினம் காலை பள்ளியில் சுதந்திரதினத்தை கொண்டாடி விட்டு மதியம் கூடலூரில் உள்ள வெண்ணாற்றில் இறங்கி விளையாடிக்கொண்டு இருந்தனர். அப்போது தண்ணீர் அதிகமாக சென்றதால் திடீரென இருவரையும் இழுத்துச்சென்றது. இதனைபார்த்த அருகில் குளித்துக்கொண்டு இருந்தவர்கள் தர்ஷினியை மீட்டனர். வசந்தியை மீட்பதற்குள் தண்ணீர் இழுத்துச்சென்றது.

இது குறித்து தஞ்சை தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று மாணவியை தேடினர். தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பசுபதி, சப்-இன்ஸ்பெக்டர் டேவிட் மற்றும் போலீசாரும் சம்பவ இடத்திற்கு சென்றனர்.

ஆனால் இரவுநேரமாகி விட்டதால் தொடர்ந்து தேடமுடியவில்லை. இந்த நிலையில் நேற்று காலை மாணவி வசந்தி ஆற்றில் விளையாடிக்கொண்டு இருந்த இடத்தில் இருந்து 10 மீட்டர் தொலைவில் அவருடைய உடல் பிணமாக மிதந்தது. இதனை பார்த்த அந்த பகுதியினர் வசந்தியின் உடலை கரைக்கு கொண்டு வந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் தாலுகா போலீசாரும் சம்பவ இடத்திற்கு சென்று வசந்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story