61 நிறுவனங்கள் மீது தொழிலாளர் துறையினர் நடவடிக்கை
தொழிலாளர் சட்ட விதிமுறைகளை பின்பற்றாத 61 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என நெல்லை தொழிலாளர் உதவி ஆணையாளர் (அமலாக்கம்) முகமது அப்துல்காதர் தெரிவித்துள்ளார்.
நெல்லை,
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-
பீடி நிறுவனங்கள் கடை மற்றும் வர்த்தக நிறுவனங்கள் உள்ளிட்ட தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு அகவிலைப்படி 1-4-2018 முதல் உயர்த்தி வழங்கி தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. சில பீடி நிறுவனங்கள் அரசால் உயர்த்தப்பட்ட அகவிலைப்படியை தொழிலாளர்களுக்கு வழங்கவில்லை என புகார்கள் வந்தன.
சென்னை தொழிலாளர் ஆணையாளர் நந்தகோபால், மதுரை கூடுதல் ஆணையாளர் பாலசந்திரன் ஆகியோர் வழிகாட்டுதலின்படி கலந்தாய்வு கூட்டம் நடத்தப்பட்டது. அதன்படி நெல்லை தொழிலாளர் இணை ஆணையாளர் ஹேமலதா முன்னிலையில் நெல்லையில் கடந்த மாதம் நடந்த கூட்டத்தில் நெல்லை மாவட்டத்தில் உள்ள பீடி நிறுவன உரிமையாளர், தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு உயர்த்தப்பட்ட அகவிலைப்படியை தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும் என அறிவுத்தப்பட்டது. மேலும் குறைந்தபட்ச கூலி வழங்க வேண்டும், பீடி தொழிலாளர் சட்டத்தின் கீழ் விதிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுத்தப்பட்டது.
இதுகுறித்து நெல்லை மாவட்டத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் (பீடி) கடந்த மாதம் 17-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின்போது முரண்பாடுகள் கண்டறியப்பட்ட 19 பீடி நிறுவனங்கள் மீதும், குறைந்தபட்ச கூலி வழங்காத 42 வர்த்தக நிறுவனங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. ஆக மொத்தமாக தொழிலாளர் சட்ட விதிமுறைகளை பின்பற்றாத 61 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story