நெல்லை மாவட்டத்தில் புதிதாக திசையன்விளை தாலுகா உதயம்


நெல்லை மாவட்டத்தில் புதிதாக திசையன்விளை தாலுகா உதயம்
x
தினத்தந்தி 17 Aug 2018 3:15 AM IST (Updated: 17 Aug 2018 1:52 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாவட்டத்தில் திசையன்விளை புதிய தாலுகா அலுவலகம் நேற்று உதயமானது. கலெக்டர் ஷில்பா குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

திசையன்விளை,


நெல்லை மாவட்டத்தில் 16-வது தாலுகாவாக, திசையன்விளையை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த புதிய தாலுகாவை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து நேற்று காலையில் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். திசையன்விளையில் புதிய தாலுகா அலுவலகம் அமைக்கப்பட்டு உள்ள நவ்வலடி சாலையில் தனியாருக்கு சொந்தமான கட்டிட திறப்பு விழா நடந்தது. மாவட்ட கலெக்டர் ஷில்பா தலைமை தாங்கி, குத்துவிளக்கு ஏற்றி புதிய தாலுகா அலுவலகத்தை தொடங்கி வைத்தார்.

மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், சேரன்மாதேவி உதவி கலெக்டர் ஆகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் கலந்து கொண்டு இன்பதுரை எம்.எல்.ஏ. பேசினார்.

அப்போது அவர் பேசுகையில்,‘ முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தொகுதி வளர்ச்சிக்கான திட்டங்களை வலியுறுத்தி உள்ளேன். அதில் முதல் திட்டம் திசையன்விளையை தலைமை இடமாக கொண்டு தனி தாலுகா அமைய வேண்டும் என்பது. அந்த திட்டம் இன்று நிறைவேறியுள்ளது. மேலும் திசையன்விளையில் ரூ.1 கோடியில் அம்மா திருமண மண்டபம் அமைய உள்ளது.

வள்ளியூர் - திருச்செந்தூர் சாலையை, திசையன்விளையை ஒட்டி செல்லும் சாலையாக அமைய முயற்சி எடுத்து வருகிறேன். அதையும் விரைவில் நிறைவேற்றி தருவேன், என்றார்.

விழாவில் 100 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டாக்களை கலெக்டர் வழங்கினார். தாலுகா அலுவலகத்திற்கு காங்கிரஸ் சார்பில் 25 நாற்காலிகள் இலவசமாக வழங்கப்பட்டன. விழாவில் நெல்லை புறநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை தலைவர் சீனிவாசன், ராதாபுரம் ஒன்றிய அ.தி. மு.க. செயலாளர் அந்தோணி அமலராஜா, திசையன்விளை நகர ஜெயலலிதா பேரவை செயலாளர் ஜெயக்குமார், அரசு வக்கீல் பழனிசங்கர், வியாபாரிகள் சங்க தலைவர் டிம்பர் செல்வராஜ், வியாபாரிகள் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் சாந்தகுமார், அரிமா சங்க முன்னாள் கவர்னர் சுயம்புராஜன், திசையன்விளை நகர பஞ்சாயத்து முன்னாள் தலைவர் சேம்பர் செல்வராஜ், தட்சணமாற நாடார் சங்க தலைவர் சபாபதி, ஆனைகுடி முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ரவீந்திரன், மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் கே.பி.கே.செல்வராஜ், நெல்லை புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் பால்துரை, துணை செயலாளர் இந்திரன், திசையன்விளை வருவாய் ஆய்வாளர் கொம்பையா, கிராம நிர்வாக அதிகாரி குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திசையன்விளை தாலுகா முதல் தாசில்தாராக தாஸ் பிரியன் பொறுப்பேற்றார். இந்த தாலுகாவில் 21 வருவாய் கிராமங்கள் உள்ளன. 

Next Story