ரேஷன்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை வழங்க ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தேர்தல் பிரிவு ஊழியருக்கு 3½ ஆண்டு சிறை
ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தேர்தல் பிரிவு ஊழியருக்கு 3½ ஆண்டு சிறை தண்டனை விதித்து திருவள்ளூர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
திருவள்ளூர்,
திருவள்ளூரை அடுத்த அம்பத்தூர் விவேக்நகரை சேர்ந்தவர் ரவிக்குமார் (வயது 55). இவர் சென்னையில் வக்கீல் ஒருவரிடம் குமாஸ்தாவாக பணிபுரிந்து வருகிறார். கடந்த 2008-ம் ஆண்டு தனக்கும் தனது மனைவிக்கும் வாக்காளர் அடையாள அட்டை வழங்குமாறு சென்னை அம்பத்தூரில் உள்ள தாலுகா அலுவலகத்தில் உள்ள தேர்தல் பிரிவில் விண்ணப்பித்தார்.
பல நாட்களாகியும் வாக்காளர் அடையாள அட்டை கிடைக்காததால், இதுகுறித்து தாலுகா அலுவலகத்தில் உள்ள தேர்தல் பிரிவில் பதிவு எழுத்தராக பணியாற்றிய பார்த்திபன் (44) என்பவரை அணுகி கேட்டார். அதற்கு அவர் வாக்காளர் அடையாள அட்டை தர வேண்டுமானால் தலா ரூ.300 வீதம் மொத்தம் ரூ.600 லஞ்சமாக தர வேண்டும் என கேட்டார்.
அப்போது பதிவு எழுத்தர் பார்த்திபன் எதற்காக வாக்காளர் அடையாள அட்டை பெறுகிறீர்கள்? என கேட்டார். அதற்கு ரவிக்குமார் ரேஷன்கார்டு பெறுவதற்கு தேவைப்படுவதாக கூறினார்.
அதைத்தொடர்ந்து பார்த்திபன் தனக்கு தெரிந்தவர் மூலம் விரைவில் ரேஷன் கார்டு பெற்று தருவதாகவும், அதற்கு லஞ்சமாக ரூ.5 ஆயிரம் தனியாக தரவேண்டும் என்றும் கேட்டுள்ளார்.
3½ ஆண்டுகள் சிறை
இதுகுறித்து சென்னையில் உள்ள லஞ்ச ஒழிப்பு துறை போலீசில் ரவிக்குமார் புகார் செய்தார். இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு துறை போலீசார், கடந்த 2-3-2009 அன்று ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டுகளை ரவிக்குமாரிடம் கொடுத்து அனுப்பினர். அதனை அவர் அம்பத்தூர் தாலுகா அலுவலகத்தில் இருந்த பதிவு எழுத்தர் பார்த்திபனிடம் கொடுத்தார். அந்த பணத்தை அவர் வாங்கியபோது அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பார்த்திபனை சுற்றி வளைத்து கைது செய்தனர்.
இந்த வழக்கு திருவள்ளூரில் உள்ள தலைமை குற்றவியல் கோர்ட்டு மற்றும் சிறப்பு கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. குற்றம் நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து பார்த்திபனுக்கு 3½ ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு அளித்தார். அபராத தொகை செலுத்த தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என அவர் உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story