காவிரியில் வெள்ளப்பெருக்கு: பள்ளிபாளையத்தில் 300 வீடுகளில் தண்ணீர் புகுந்தது


காவிரியில் வெள்ளப்பெருக்கு: பள்ளிபாளையத்தில் 300 வீடுகளில் தண்ணீர் புகுந்தது
x
தினத்தந்தி 17 Aug 2018 4:45 AM IST (Updated: 17 Aug 2018 2:20 AM IST)
t-max-icont-min-icon

காவிரியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் பள்ளிபாளையம் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்தது. ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

பள்ளிபாளையம்,

மேட்டூர் அணையில் இருந்து அதிகளவு தண்ணீர் திறக்கப்பட்டதால் காவிரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் காவிரி ஆற்றின் மீது போக்குவரத்துக்கு 2 பாலங்கள் உள்ளன. பழைய பாலத்தை ஒட்டியபடி வெள்ளம் செல்வதால் பாலத்தில் பஸ், லாரி, இருசக்கர வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டு, போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

காவிரி கரையில் உள்ள பெருமாள், முருகன், விநாயகர் கோவில்களை தண்ணீர் சூழ்ந்துள்ளது. ஆவரங்காடு, ஜனதா நகர் பகுதியில் உள்ள 100-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் மூழ்கடித்தது. இதேபோல முருகன் கோவில் கரை, ஓம்காளியம்மன் கோவில் பாவடி தெரு, அக்ரஹாரம், காளியம்மன் கோவில்கள் பகுதிகளில் 200 வீடுகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது.

மேலும் அக்ரஹாரம் ஜெயலட்சுமி தியேட்டர் பின்புறம் குமரன் நகரில் தண்ணீர் புகுந்தது. கரையோர வீடுகளில் இருந்த 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வெளியேற்றப்பட்டு அக்ரஹாரம் ஊராட்சி தொடக்கப்பள்ளி, சவுடேஸ்வரி மண்டபம், ஆவரங்காடு நகராட்சி மண்டபம், சந்தைப்பேட்டை நாட்டாகவுண்டம்புதூரில் உள்ள பள்ளிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு வருவாய் துறை சார்பில் உணவு வழங்கப்பட்டது.

புதிய பாலத்தின் மீது ஏராளமான பொதுமக்கள் நின்றுகொண்டு பழைய பாலத்தின் கீழ் தண்ணீர் செல்வதை பார்வையிட்டனர். செல்பியும் எடுத்துக்கொண்டனர். ஆற்றின் நடுவில் உள்ள முனியப்பன் சிலை பாதி மூழ்கி விட்டது. ஆவத்திபாளையம் ராமகிருஷ்ணா நகர் குடியிருப்பில் தண்ணீர் புகுந்தது. அங்கிருந்த அங்கன்வாடி மையமும் தண்ணீரால் சூழப்பட்டது.

இதற்கிடையில் நாட்டாகவுண்டம்புதூர், பாவடிதெரு, முருகன் கோவில் கரை பகுதி, ஜனதாநகர் பகுதியில் மண்டபம், பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களை வணிகவரித்துறை மற்றும் பதிவுத்துறை முதன்மை செயலாளர் பாலச்சந்திரன். நேரில் சந்தித்து விசாரித்தார் மேலும் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளையும் அவர் நேரில் பார்வையிட்டார்.

அவருடன் ஆதிதிராவிடர் நல உதவி கலெக்டர் சாந்தி, மாவட்ட வருவாய் அலுவலர் பழனிசாமி, பள்ளிபாளையம் வட்டார வளர்ச்சி அதிகாரி சிவராமகிருஷ்ணன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பாலவினாயகம், தாசில்தார் ரகுநாதன், வருவாய் ஆய்வாளர் மதன் மற்றும் அலுவலர்கள் சென்றனர். இதேபோல முன்னாள் ஒன்றிய தலைவர் செந்தில், முன்னாள் நகராட்சி தலைவர் வெள்ளிங்கிரி ஆகியோரும் பாதிக்கப்பட்டவர்களை நேரில் பார்த்து தேவையான உதவிகளை செய்தனர்.

குமாரபாளையம் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்து, பொதுமக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளை நாமக்கல் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், வணிகவரித்துறை மற்றும் பதிவுத்துறை முதன்மை செயலாளருமான பாலச்சந்திரன் நேற்று பார்வையிட்டார். அவருடன் மாவட்ட வருவாய் அலுவலர் பழனிசாமி, தாசில்தார் ரகுநாதன், நகராட்சி ஆணையாளர் மகேஸ்வரி, துணை போலீஸ் சூப்பிரண்டு சண்முகம், இன்ஸ்பெக்டர் தேவி மற்றும் அதிகாரிகள் சென்றனர்.

பின்னர் அவர் ஜே.கே.கே.நடராஜா திருமண மண்டபம் மற்றும் புத்தர்தெரு நகராட்சி நடுநிலைப்பள்ளியில் தங்கவைக்கப்பட்டுள்ள காவிரி கரையோர மக்களை சந்தித்து பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், “அரசு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு உணவு, மருத்துவ வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மாற்று ஏற்பாடு செய்ய அரசு பரிசீலிக்கும்” என்றார். 

Next Story