நகை பட்டறையில் ரூ.12 லட்சம் மதிப்புள்ள தங்க கம்பிகள் அபேஸ்
விழுப்புரத்தில் உள்ள நகை பட்டறையில் ரூ.12 லட்சம் மதிப்புள்ள தங்க கம்பிகளை அபேஸ் செய்த மேற்கு வங்காளத்தை சேர்ந்த வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
விழுப்புரம்,
விழுப்புரம் வாணியர் தெருவை சேர்ந்தவர் பாஸ்கரன்(வயது 51), இவர் விழுப்புரம் காமராஜர் வீதியில் உள்ள அமராவதி விநாயகர் கோவில் சந்தில் நகை செய்யும் பட்டறை வைத்துள்ளார்.
இந்த பட்டறையில் மேற்கு வங்காள மாநிலம் கூக்லி மாவட்டம் ஆரம்பாக் என்ற கிராமத்தை சேர்ந்த பெரோஸ் (32) என்பவர் கடந்த 4 ஆண்டுகளாக வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் பாஸ்கரனிடம் நகை செய்வதற்காக சிலர் தங்கத்தை கொடுத்துள்ளனர். நேற்று முன்தினம் மதியம் 61 பவுன் எடையுள்ள தங்கத்தை கம்பிகளாக வளைத்து அவற்றை பெரோசிடம் கொடுத்து பீரோவில் வைக்கும்படி பாஸ்கரன் கூறினார்.
பின்னர் இரவில் வியாபாரம் முடிந்ததும் பட்டறையை பூட்டுவதற்கு முன்பு பீரோவில் இருக்கும் நகையை வீட்டிற்கு கொண்டு செல்வதற்காக அந்த பீரோவை பாஸ்கரன் திறந்தார். அப்போது பீரோவில் இருந்த தங்க கம்பிகள் காணாததை கண்டு திடுக்கிட்டார். அவரது பட்டறையில் வேலை பார்த்து வந்த பெரோசும், மாலை வேளையில் வெளியில் சென்று விட்டு வருவதாக கூறிச்சென்றவர் வெகு நேரமாகியும் திரும்பி வராததால் அவர், தங்க கம்பிகளை அபேஸ் செய்திருப்பது தெரியவந்தது. பறிபோன தங்க கம்பிகளின் மதிப்பு ரூ.12 லட்சமாகும்.
இதுகுறித்து பாஸ்கரன், விழுப்புரம் நகர போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராபின்சன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெரோசை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story