ஏ.டி.எம். மையத்தில் பெண்ணுக்கு உதவி செய்வதுபோல் நடித்து ரூ.36 ஆயிரம் அபேஸ்


ஏ.டி.எம். மையத்தில் பெண்ணுக்கு உதவி செய்வதுபோல் நடித்து ரூ.36 ஆயிரம் அபேஸ்
x
தினத்தந்தி 17 Aug 2018 3:30 AM IST (Updated: 17 Aug 2018 2:46 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சியில் ஏ.டி.எம். மையத்தில் பெண்ணுக்கு உதவி செய்வதுபோல் நடித்து போலி கார்டை கொடுத்து ரூ.36 ஆயிரத்தை அபேஸ் செய்து சென்ற வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி, 


கள்ளக்குறிச்சி அருகே உள்ள குதிரைசந்தல் பகுதியை சேர்ந்தவர் காமராஜ் (வயது 50). இவரது மனைவி சின்னபிள்ளை(46). இவர் சம்பவத்தன்று தனது வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுக்க முடிவு செய்து, கள்ளக்குறிச்சி ராஜா நகரில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் ஏ.டி.எம். மையத்துக்கு சென்றார்.

சின்னபிள்ளைக்கு ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் எடுக்க தெரியாததால், அங்கு நின்று கொண்டிருந்த 20 வயது மதிக்கத்தக்க வாலிபரிடம் ஏ.டி.எம்.கார்டை கொடுத்து, பணம் எடுத்து தருமாறு கூறினார். பின்னர் அந்த வாலிபரிடம் ஏ.டி.எம்.கார்டு ரகசிய எண்ணை தெரிவித்தார்.

இதையடுத்து அந்த வாலிபர் ஏ.டி.எம். எந்திரத்தில் கார்டை செலுத்தினார். பின்னர் சின்னபிள்ளையிடம் உங்கள் கணக்கில் பணம் இல்லை என்று கூறி விட்டு, ஏ.டி.எம்.கார்டை அவரிடம் கொடுத்தார்.
ஏ.டி.எம்.கார்டை பெற்றுக் கொண்ட சின்னபிள்ளை வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது அவரது செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி ஒன்று வந்தது. அதில் வங்கி கணக்கில் இருந்து ரூ.36 ஆயிரம் எடுக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சின்னபிள்ளை வங்கிக்கு சென்று அங்கிருந்த அதிகாரியிடம் தெரிவித்தார். அப்போது அதிகாரி, உங்கள் கணக்கில் இருந்து ஏ.டி.எம். எந்திரம் மூலம் பணம் எடுக்கப்பட்டிருக்கிறது என்று கூறினார்.அதன் பின்னர் தான் சின்னபிள்ளைக்கு, வங்கி ஏ.டி.எம். மையத்தில் நின்ற அந்த வாலிபர் தன்னிடம் போலி கார்டை கொடுத்து விட்டு, தனது ஏ.டி.எம்.கார்டு மூலம் ரூ.36 ஆயிரம் எடுத்திருப்பது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஏ.டி.எம். மையத்தில் உதவி செய்வது போல் நடித்து ரூ.36 ஆயிரத்தை அபேஸ் செய்து சென்ற வாலிபரை வலைவீசி தேடி வருகின்றனர். 

Next Story