கடலூர் மாவட்டத்தை விபத்து இல்லாத மாவட்டமாக உருவாக்குவோம்


கடலூர் மாவட்டத்தை விபத்து இல்லாத மாவட்டமாக உருவாக்குவோம்
x
தினத்தந்தி 16 Aug 2018 9:41 PM GMT (Updated: 16 Aug 2018 9:41 PM GMT)

கடலூர் மாவட்டத்தை விபத்து இல்லாத மாவட்டமாக ஆக்குவோம் என கடலூரில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் போலீஸ் சூப்பிரண்டு சரவணன் கூறினார்.

கடலூர், 


சாலை விபத்தை தடுக்கும் வகையில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் சாலை விபத்துகள் நடக்கும் இடங்கள் என கண்டறியப்பட்ட பகுதிகளில் ஒலிபெருக்கி மூலம் சாலை பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக நெடுஞ்சாலை ரோந்து பிரிவு போலீசாருக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வாசகங்கள் கொண்ட ‘பென்டிரைவ்’ வழங்கும் நிகழ்ச்சி கடலூர் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது.

இதற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் தலைமை தாங்கி மாவட்டம் முழுவதிலும் உள்ள 13 நெடுஞ்சாலை ரோந்து பிரிவு போலீசாருக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வாசங்கள் அடங்கிய ‘பென்டிரை’வை வழங்கினார்.

பின்னர் அவர் பேசும்போது கூறியதாவது:-

எந்த ஒரு பிரச்சினையையும் சரியான அணுகுமுறையில் கையாண்டால் அதற்கு தீர்வுகாண முடியும்.
அதேபோல்தான் சாலை விபத்துக்களையும் தடுக்க முடியும். கடந்த ஆண்டு மட்டும் சாலை விபத்தில் 571 பேர் மரணம் அடைந்துள்ளனர். 3 ஆயிரத்து 634 பேர் படுகாயம் அடைந்தும், கை, கால்களை இழந்தும் பாதிக்கப்பட்டுள்ளனர். சாலை பாதுகாப்பு விதிகள் குறித்து பொதுமக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாததே விபத்துக்கு காரணம்.

எனவே பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நெடுஞ்சாலை ரோந்து பிரிவு போலீசாருக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ‘பென்டிரைவ்’ வழங்கப்படுகிறது. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும், அடிக்கடி விபத்து நிகழும் பகுதி என அடையாளம் காணப்பட்ட பகுதிகளிலும் ரோந்து வாகனத்தில் உள்ள ஒலிபெருக்கி மூலம் பென்டிரைவில் உள்ள சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு வாசகத்தை ஒலிபரப்பி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். சாலை விதிமுறைகளை மீறி செல்வோருக்கு போதிய அறிவுரை வழங்க வேண்டும். இந்த பணியை நெடுஞ்சாலை ரோந்து பிரிவு போலீசார் தினந்தோறும் மேற்கொள்ள வேண்டும். இதன்மூலம் கடலூர் மாவட்டத்தை விபத்து இல்லாத மாவட்டமாக உருவாக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் உதவி போலீஸ் சூப்பிரண்டு தீபாசத்யன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் வீரராகவன், வேதரத்தினம், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் லாமேக், பாண்டியன், வெங்கடேசன், சுந்தரவடிவேல், தங்கவேல், தனிப்பிரிவு ஆய்வாளர் சுரேஷ்கண்ணன், ஊர்காவல்படை வட்டார தளபதி டாக்டர் சுரேந்திரகுமார், நெடுஞ்சாலை ரோந்து பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார் கலந்துகொண்டனர். 

Next Story