முசிறி அருகே கார் மீது லாரி மோதல்; இரும்பு கடைக்காரர் பலி ஸ்கூட்டரில் வந்த பெண் போலீஸ் படுகாயம்


முசிறி அருகே கார் மீது லாரி மோதல்; இரும்பு கடைக்காரர் பலி ஸ்கூட்டரில் வந்த பெண் போலீஸ் படுகாயம்
x
தினத்தந்தி 17 Aug 2018 4:15 AM IST (Updated: 17 Aug 2018 3:24 AM IST)
t-max-icont-min-icon

முசிறி அருகே கார் மீது லாரி மோதியதில் இரும்பு கடைக்காரர் பலியானார். ஸ்கூட்டரில் சென்ற பெண் போலீஸ் பலத்த காயமடைந்தார்.

முசிறி,

திருச்சி பீமநகர் புதிய ராஜாகாலனியை சேர்ந்தவர் சர்புதீன் (வயது 48). இவர், சேலத்தில் இரும்புக்கடை நடத்தி வந்தார். நேற்று சேலம் செல்வதற்காக தனது காரில் சென்றார். காரை அவரே ஓட்டி சென்றார். முசிறி-வெள்ளூர் தனியார் செங்கல்சூளை அருகே கார் சென்று கொண்டிருந்தது.

அப்போது எதிரே கேரளாவிலிருந்து அரியலூருக்கு உர மூட்டைகள் ஏற்றி கொண்டு கனரக லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. அதன் டிரைவர் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது லாரி, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சர்புதீன் ஓட்டி வந்த கார் மற்றும் முசிறி போக்குவரத்து பிரிவில் பெண் போலீசாக பணிபுரியும் சுபாஷினி(37) என்பவர் ஓட்டி வந்த ஸ்கூட்டர் ஆகியவற்றின் மீது மோதி விட்டு மரத்தில் மோதி நின்றது.

இதில் காரில் வந்த இரும்பு கடைக்காரர் சர்புதீன் சம்பவ இடத்திலேயே பலியானார். பெண் போலீஸ் சுபாஷினி தலையில் பலத்த காயம் அடைந்தார். விபத்தை பார்த்ததும் அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து சுபாஷினியை மீட்டு திருச்சி தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் குடிபோதையில் லாரியை ஓட்டிவந்த டிரைவரை பிடித்து சரமாரியாக தாக்கியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த முசிறி இன்ஸ்பெக்டர் ஜெயசித்ரா, சப்-இன்ஸ்பெக்டர் ராம்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று லாரி டிரைவரை மீட்டனர். பின்னர், சர்புதீன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், லாரியை ஓட்டி வந்தவர் திண்டுக்கல் மாவட்டம் கருங்கல் கிராமத்தை சேர்ந்த முத்துசாமி என்பது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story