கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு: பாதிக்கப்பட்ட பகுதிகளை கலெக்டர் ஆய்வு


கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு: பாதிக்கப்பட்ட பகுதிகளை கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 16 Aug 2018 10:00 PM GMT (Updated: 16 Aug 2018 11:00 PM GMT)

சிதம்பரம் கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கலெக்டர் பார்வையிட்டார். மேலும் 3 கிராம மக்களை புயல் பாதுகாப்பு மையத்தில் தங்க வைக்க ஏற்பாடு செய்துள்ளார்.

சிதம்பரம்,


கர்நாடக மாநிலத்தில் பருவமழை கொட்டி வருகிறது. இதனால் அங்குள்ள அணைகள் நிரம்பி, உபரிநீர் மேட்டூர் அணைக்கு திறந்துவிடப்பட்டது. இதன்காரணமாக மேட்டூர் அணை 2-வது முறையாக நிரம்பியது.

இதையடுத்து அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததை தொடர்ந்து அதில் இருந்து வினாடிக்கு 1 லட்சத்து 90 ஆயிரம் கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. இந்த நீர், தஞ்சாவூர் மாவட்டம் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட கீழணையை வந்தடைந்து, அங்கிருந்து வெளியேறும் உபரிநீர் சிதம்பரம் வல்லம்படுகை கொள்ளிடம் ஆறு வழியாக கொடியம்பாளையத்தில் வங்க கடலில் கலந்து வருகிறது.

அந்த வகையில் நேற்று 3-வது நாளாக சிதம்பரம் கொள்ளிடம் ஆற்றில் மழைவெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதில் காவிரி நீர் அருகில் உள்ள பழைய கொள்ளிடம் ஆற்றில் உட்புகுந்தது. இதன் விளைவாக பெராம்பட்டுக்கும், திட்டுக்காட்டூருக்கும் இடையே இருந்த தரைப்பாலத்தை வெள்ளம் மூழ்கடித்தது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் கீழகுண்டலபாடி, திட்டுக்காட்டூர், ஜெயங்கொண்டப்பட்டினம், நடுத்திட்டு, வேளக்குடி, மடத்தான்தோப்பு, பெராம்பட்டு ஆகிய 7 கிராமங்களை வெள்ளம் சூழ்ந்தது. இதில் திட்டுக்காட்டூர், கீழகுண்டலப்பாடி, ஜெயங்கொண்டபட்டினம் ஆகிய கிராமங்கள் தீவுப்போல மாறியுள்ளது. இதனால் அங்கு படகு மூலம் மக்கள் சென்று வர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது. இதுதவிர கொள்ளிடக்கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு, பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று காலை நிலவரப்படி சிதம்பரம் கொள்ளிடம் ஆற்றில் 58 ஆயிரம் கனஅடி தண்ணீர் சென்றது.

இந்த நிலையில் கொள்ளிடம் கரையோர பகுதியில் முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்தவற்காக மாவட்ட கலெக்டர் தண்டபாணி நேற்று சிதம்பரத்திற்கு சென்றார். அங்கிருந்து அவர், மழைவெள்ளம் சூழ்ந்த பெராம்பட்டு கிராமத்திற்கு சென்றார். அவருடன் போலீஸ் சூப்பிரண்டு சரவணன், மாவட்ட வருவாய் அதிகாரி விஜயா, பாண்டியன் எம்.எல்.ஏ., சிதம்பரம் கோட்டாட்சியர் ராஜேந்திரன், தாசில்தார் அமுதா மற்றும் அதிகாரிகளும் உடன் சென்றனர். தொடர்ந்து பெராம்பட்டில் இருந்து திட்டுக்காட்டூருக்கு கலெக்டர் மற்றும் அதிகாரிகள் படகு மூலம் சென்றனர். பின்னர் கலெக்டர் தண்டபாணி, திட்டுக்காட்டூர், கீழகுண்டலபாடி, ஜெயங்கொண்டபட்டினம் ஆகிய பகுதிகளுக்கு சென்று மழைவெள்ளம் சூழ்ந்த பகுதியை பார்வையிட்டார்.

மேலும் அந்தந்த ஊரில் தயார் நிலையில் உள்ள புயல் பாதுகாப்பு மையத்தில் கிராம மக்கள் தங்குவதற்கு தேவையான அனைத்து வசதிகளை ஏற்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து அவர், கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எனவே கீழகுண்டலபாடி உள்பட 3 கிராம மக்களும் அந்தந்த புயல் பாதுகாப்பு மையங்களில் இன்று (அதாவது நேற்று) மாலைக்குள் வந்து தங்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். அதன்பிறகு அவர் அங்கிருந்து புறப்பட்டு சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்றார். அங்கு வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளுடன் கலெக்டர் பேசினார். அப்போது கொள்ளிடம் ஆற்றில் 1½ லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர் செல்ல வாய்ப்பு உள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செய்ய வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கலந்தாலோசனை நடத்தினார். 

Next Story