நன்கு காய்ச்சி வடிகட்டிய குடிநீரை குடிக்க வேண்டும் - பொதுமக்களுக்கு கலெக்டர் பிரபாகர் வேண்டுகோள்


நன்கு காய்ச்சி வடிகட்டிய குடிநீரை குடிக்க வேண்டும் - பொதுமக்களுக்கு கலெக்டர் பிரபாகர் வேண்டுகோள்
x
தினத்தந்தி 17 Aug 2018 12:00 AM GMT (Updated: 17 Aug 2018 12:00 AM GMT)

நன்கு காய்ச்சி வடிகட்டிய குடிநீரை பொதுமக்கள் குடிக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

ஈரோடு,

கர்நாடகா மாநிலத்தில் பெய்த கனமழை காரணமாக காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 1 லட்சத்து 60 ஆயிரம் கனஅடிக்கு மேல் உபரிநீர் திறந்து விடப்படுகிறது. இதேபோல் பவானிசாகர் அணையில் இருந்தும் வினாடிக்கு 60 ஆயிரம் கனஅடிக்கு மேல் தண்ணீர் திறந்துவிடப்பட்டு உள்ளது. இதனால் ஈரோடு மாவட்டத்தின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் காவிரி, பவானி ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. எனவே குடிநீரை சுத்தமாக காய்ச்சி குடிக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-

மழை காலங்களில் மேல்நிலை குடிநீர் தொட்டிகளிலோ, தரைமட்ட குடிநீர் தொட்டிகளிலோ, குடிநீர் குழாய்களிலோ மழை வெள்ளம் புகுந்திருக்கும். எனவே அந்த தொட்டிகள் பிளிச்சிங் பவுடர் கொண்டு சுத்தம் செய்யப்பட வேண்டும். குடிநீர் வினியோகம் செய்யப்பட்டவுடன் முதல் 5 நிமிடங்களில் தெருக்குழாய் வழியாகவோ, வீட்டுகுழாய் வழியாகவோ வரும் குடிநீரை குடிப்பதற்கு பயன்படுத்தக்கூடாது. மேலும் குடிநீரை பொதுமக்கள் நன்கு காய்ச்சி வடிகட்டி குடிக்க வேண்டும்.

பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகிக்கப்படும்போது, தகுந்த அளவு குளோரின் கலந்திருக்கிறதா? என்பதை சுகாதார அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். கிணறு மற்றும் டேங்கர் வாகனங்கள் மூலமாக வினியோகிக்கப்படும் தண்ணீரிலும் குளோரின் கலந்து வினியோகிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

பொதுமக்கள் தங்க வைக்கப்பட்டிருக்கும் இடங்களிலும், வெள்ளம் புகுந்த ஊர்களிலும் மருத்துவ முகாம் நடத்தப்பட்டு வருகிறது. நீரினால் பரவும் வயிற்றுப்போக்கு போன்ற தொற்றுநோய்கள் ஏற்படாத வகையில் சுகாதார அதிகாரிகள் மூலமாக தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய மருந்துகள் போதுமான அளவு இருப்பில் வைக்கப்பட்டு உள்ளது. மேலும் அவசர கால வாகனங்கள், மருத்துவ வாகனங்கள் தயார் நிலையில் உள்ளன.

எனவே வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சுகாதார பணியாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி, தங்கள் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் கூறி உள்ளார்.


Next Story