தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப விவசாயம் செய்தால் நல்ல மகசூல் கிடைக்கும்


தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப விவசாயம் செய்தால் நல்ல மகசூல் கிடைக்கும்
x
தினத்தந்தி 17 Aug 2018 3:30 AM IST (Updated: 17 Aug 2018 5:38 AM IST)
t-max-icont-min-icon

தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப விவசாயம் செய்தால் நல்ல மகசூல் கிடைக்கும் என்று கிராமசபை கூட்டத்தில் கலெக்டர் கந்தசாமி பேசினார்.

கீழ்பென்னாத்தூர்,


கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றியம், வேடநத்தம் கிராமத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடந்தது. கலெக்டர் கந்தசாமி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

மத்திய, மாநில அரசுகள் கிராமங்களை முன்னேற்றப் பாதையில் எடுத்துச் செல்வதற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் பெண் குழந்தைகள் திருமணம் அதிகமாக நடைபெறுகிறது. பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தைகளுக்கு 18 வயதிற்கு முன்னர் கண்டிப்பாக திருமணம் செய்து வைக்கக்கூடாது.
மேலும், அதிகளவில் குழந்தைகள் பெற்றுக்கொள்வதும் ஆரோக்கியமானது கிடையாது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு கல்வியை கொடுங்கள், கல்வி தான் கிராமங்களையும், நாட்டையும் வளர்ச்சிப் பாதைக்கு எடுத்துச் செல்லும்.

விவசாயிகள் இன்றும் பழைய முறையில் விவசாயம் செய்து வருகிறார்கள். இன்றைய காலத்தில் விவசாயத்தில் பல்வேறு மாற்றங்கள், தொழில் நுட்பங்கள் கடைபிடிக்கப்படுகிறது. தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப விவசாயம் செய்தால் கண்டிப்பாக நல்ல மகசூல் கிடைக்கும்.
ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்குவதற்காக தற்போது ஸ்மார்ட் குடும்ப அட்டை அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நீங்கள் வாங்கும் அனைத்து பொருட்கள் குறித்த விவரம் உங்கள் கைபேசியில் உடனடியாக குறுஞ்செய்தி அனுப்பும் வசதி செய்யப்பட்டுள்ளது. இதனால் உங்கள் குடும்ப அட்டைகளை பயன்படுத்தி வேறு நபர்கள் யாரும் பொருட்கள் வாங்க முடியாத நிலை உருவாகி உள்ளது.

கிராமங்கள் தோறும் அங்கன்வாடி மையங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழக அரசின் அங்கன்வாடி மையங்களை பார்த்து தான் தனியார் நர்சரி பள்ளிகள் கொண்டு வரப்பட்டது. அங்கன்வாடி மையங்களில் 2 வயது முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு ஆரம்பக் கல்வியும், ஆரோக்கியமான உணவும் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், கர்ப்பிணி தாய்மார்களுக்கு பிரசவ காலத்தில் அவர்கள் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவு முறைகள் குறித்து அறிவுரைகள் வழங்கப்படுகிறது.

பொதுமக்கள் மழை காலங்களில் டெங்கு காய்ச்சல், மலேரியா போன்ற பல்வேறு நோய்களால் பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகும். அதற்கு முன்பாக பொதுமக்கள் முன் எச்சரிக்கையாக தங்கள் வீடுகள், சுற்றுப்புறங்கள், கிராமங்களை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்திருக்க வேண்டும். மேலும், மழைநீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மேற்கண்ட முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்தால் கண்டிப்பாக எந்தவித நோயும் உங்களை தாக்காது. அரசு எல்லா தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. இதனை எல்லாம் நீங்கள் முழுமையாக பயன்படுத்திக் கொண்டு உங்கள் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தி கெள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில், உதவி கலெக்டர் (பயிற்சி) பிரதாப், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) ஜி.அரவிந்த், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் உமாமகேஸ்வரி, ஊராட்சி செயலாளர் சவுந்தர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல திருவண்ணாமலை மாவட்டத்தில் 860 கிராம ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டம் நடந்தது. 

Next Story