பவானி ஆற்றில் 75 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறப்பு: சத்தி-பவானிசாகரில் 600 வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது


பவானி ஆற்றில் 75 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறப்பு: சத்தி-பவானிசாகரில் 600 வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது
x
தினத்தந்தி 17 Aug 2018 5:38 AM IST (Updated: 17 Aug 2018 5:38 AM IST)
t-max-icont-min-icon

பவானி ஆற்றில் வினாடிக்கு 75 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டதால் சத்தியமங்கலம், பவானிசாகரில் 600 வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. மேலும் தண்ணீரில் பள்ளிக்கூட வேன் இழுத்து செல்லப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சத்தியமங்கலம்,

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் அணை நிரம்பியது. இதன்காரணமான நேற்று முன்தினம் பில்லூர் அணையில் இருந்து பவானி ஆற்றில் 35 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டது. நேற்று இரவு 7 மணி அளவில் பவானி ஆற்றில் 75 ஆயிரம் கன அடி தண்ணீர் அதிகரித்து திறக்கப்பட்டது. இதனால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததுடன் அணையின் நீர்மட்டம் 102.09 அடியாக உயர்ந்தது.

இதைத்தொடர்ந்து பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றில் வினாடிக்கு 75 ஆயிரம் கனஅடியும், கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 2 ஆயிரத்து 300 கனஅடியும் தண்ணீர் திறக்கப்படுகிறது.

இதனால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன்காரணமாக பவானிசாகர் அருகே உள்ள அரியப்பம்பாளையம், தொட்டம்பாளையம், பழையூர் பகுதியில் உள்ள 350-க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் புகுந்தது.

இதேபோல் சத்தியமங்கலம் அருகே கரட்டூர் மற்றும் பாத்திமாநகர், கெஞ்சனூர் ஆகிய பகுதிகளில் உள்ள 200-க்கும் மேற்பட்ட வீடுகளில் பவானி ஆற்று தண்ணீர் புகுந்தது. இதனால் வீடுகளில் இருந்தவர்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு சென்றனர். மேலும் வீட்டில் இருந்து முக்கியமான சான்றிதழ்கள், தேவையான பொருட்களை பலர் தங்களுடைய வயிற்றில் ‘மிதவை டியூப்’ கட்டியபடி பாதுகாப்பாக எடுத்து வந்தனர். மேலும் சத்தியமங்கலம் அய்யப்பன் கோவில் படித்துறை வெள்ளத்தில் மூழ்கியது. அதுமட்டுமின்றி அய்யப்பன் கோவில் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் அனைவரும் சத்தியமங்கலத்தில் உள்ள ஆனைக்கொம்பு அரங்கத்துக்கு பாதுகாப்பாக அழைத்து வரப்பட்டு தங்க வைக்கப்பட்டனர்.

இந்த வெள்ளப்பெருக்கால் சத்தியமங்கலம் பாலம் அருகே உள்ள பவானீஸ்வரரின் கோவில் சுற்றுச்சுவரின் ஒருபகுதி இடிந்துவிழுந்து விட்டது. அப்போது கோவிலில் பக்தர்கள் யாரும் இல்லாததால் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை. மேலும் நேற்றுக்காலை சத்தியமங்கலத்தில் உள்ள பழைய பாலம் மற்றும் புதிய பாலம் அருகே சத்தியமங்கலம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பாலத்தின் வழியாக பொதுமக்கள் நடந்து செல்ல போலீசார் அனுமதிக்கவில்லை. அதே நேரத்தில் வாக னங்கள் ஒவ்வொன்றாக செல்ல அனுமதிக்கப்பட்டன.

நேற்று காலை கோபியில் இருந்து சத்தியமங்கலம் அருகே உள்ள ஆலத்துக்கோம்பைக்கு தனியார் பள்ளிக்கூட வேன் ஒன்று மாணவ- மாணவிகளை அழைத்து வருவதற்காக சென்றது. ஏற்கனவே ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக ஆலத்துக்கோம்பை ஊருக்குள் தண்ணீர் புகுந்ததுடன் அங்குள்ள ரோட்டில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இந்த நிலையில் அந்த ரோட்டின் வழியாக சென்ற பள்ளி வேன் எதிர்பாராதவிதமாக தண்ணீரில் இழுத்து செல்லப்பட்டு ரோட்டோர பள்ளத்தில் இறங்கியது. தண்ணீர் அதிக அளவில் சென்றதால் வேனின் பாதியளவு பகுதி தண்ணீரில் மூழ்கியது. உடனே வேனின் டிரைவர் மற்றும் அதில் இருந்த பெண் உதவியாளர் ஆகியோர் சத்தம் போட்டு கத்தினர். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர். ஓடோடி வந்து 2 பேரையும் மீட்டனர். இதைத்தொடர்ந்து அப்பகுதி மக்கள் தண்ணீரில் மூழ்கிய வேனை டிராக்டரில் கயிறு கட்டி மீட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இதேபோல் கோபி அருகே உள்ள கொடிவேரி அணை மூழ்கியபடி தண்ணீர் செல்கிறது. இதனால் நேற்று 2-வது நாளாக சுற்றுலாப்பயணிகள் அணையை சுற்றிப்பார்க்கவும், குளிக்கவும் தடை விதிக்கப்பட்டது. மேலும் ஆற்றின் கரையோரங்களில் நின்று மீன்கள் பிடிக்க வேண்டாம் என்று பொதுமக்களுக்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

Next Story