ஒரே நாளில் 3 காதல் ஜோடிகள் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சம்


ஒரே நாளில் 3 காதல் ஜோடிகள் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சம்
x
தினத்தந்தி 17 Aug 2018 3:30 AM IST (Updated: 17 Aug 2018 5:59 AM IST)
t-max-icont-min-icon

வேலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பாதுகாப்பு வழங்கக்கோரி 3 காதல் ஜோடிகள் நேற்று ஒரேநாளில் தஞ்சமடைந்தனர். அவர்களில் மைனர் பெண்ணை கடத்தியதாக 2 ராணுவவீரர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

வேலூர், 


காட்பாடியை அடுத்த கே.வி.குப்பம் சந்தைமேடு பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 21). இவர், ஜம்மு–காஷ்மீரில் கடந்த 2 ஆண்டுகளாக ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார். இவரும், அதே பகுதியை சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவி ஒருவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்தனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், இவர்கள் காதலுக்கு பெண் வீட்டு தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இதையடுத்து, விடுமுறையில் ஊருக்கு வந்த ராணுவவீரர் சதீஷ், கடந்த 11–ந் தேதி மாணவியை அழைத்து சென்று யாருக்கும் தெரியாமல் அரியூரில் உள்ள கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் நேற்று இருவரும் பாதுகாப்பு வழங்கக்கோரி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர். பின்னர் அவர்கள் போலீசாரிடம் மனு அளித்தனர்.

நாட்டறம்பள்ளி அருகே உள்ள பச்சூர் கவுண்டர் வட்டத்தை சேர்ந்தவர் ஜெயஸ்ரீ (வயது 20). இவர் கிருஷ்ணகிரியில் உள்ள கல்லூரியில் பி.எஸ்சி. இறுதியாண்டு படிக்கிறார். இவரும், பழையபேட்டை பகுதியை சேர்ந்த மயில்வாணன் (22) என்பவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்தனர். மயில்வாணன், ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், பெண் வீட்டில் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும் ஜெயஸ்ரீக்கு வேறு ஒருவருடன் திருமணம் செய்து வைக்க பெற்றோர் ஏற்பாடு செய்தனர். இதையடுத்து, ஒடிசாவில் இருந்து சொந்த ஊருக்கு வந்த மயில்வாணன் காதலி ஜெயஸ்ரீயை எதிர்ப்பை மீறி கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டார்.

இதையடுத்து, பாதுகாப்பு கேட்டு மயில்வாணன் தனது காதல் மனைவி ஜெயஸ்ரீயுடன் நேற்று போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர். மேலும் அவர்கள் பாதுகாப்பு வழங்கக்கோரி போலீசாரிடம் மனு அளித்தனர்.

ஆம்பூர் லேப்டெக்னீசியன் 


ஆம்பூர் பி–கஸ்பா பகுதியை சேர்ந்தவர் திவ்யபாரதி (வயது 21), லேப் டெக்னீசியன். இவரும், அதே பகுதியை சேர்ந்த ராஜ்குமாரும் (25) கடந்த 5 ஆண்டுகளாக காதலித்துள்ளனர். இவர்களது காதலை அறிந்த திவ்யபாரதியின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து, வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்க்க தொடங்கி உள்ளனர். அதனால் கடந்த 11–ந் தேதி திவ்யபாரதி வீட்டை விட்டு வெளியேறி ராஜ்குமாருடன் சென்று திருவண்ணாமலையில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டார்.

 இருவரும் பாதுகாப்பு வழங்கக்கோரி நேற்று போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர். பின்னர் அவர்கள் பாதுகாப்பு வழங்கக்கோரி போலீசாரிடம் மனு அளித்தனர். மனுக்களை பெற்றுக்கொண்ட போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர்.

வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரே நாளில் அடுத்தடுத்து 3 காதல் ஜோடிகள் பாதுகாப்பு வழங்கக்கோரி தஞ்சம் அடைந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
ராணுவ வீரர் சதீஷ்குமார் காதலித்த கல்லூரி மாணவியை காணவில்லை என அவருடைய பெற்றோர் கடந்த 11–ந் தேதி கே.வி.குப்பம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தனர். அதன்பேரில் கே.வி.குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.

இந்த நிலையில் சதீஷ்குமார் இளம்பெண்ணுடன் நேற்று வேலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தார். அப்போது, போலீசார் நடத்திய விசாரணையில் அந்த பெண் மைனர் என்பது தெரியவந்தது. இதனைதொடர்ந்து மைனர் பெண்ணை கடத்தி சென்றதாக ராணுவவீரர் சதீஷ்குமாரை போலீசார் கைது செய்தனர். அவருக்கு உடந்தையாக இருந்ததாக கெம்மங்குப்பம் கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் மகன் அருண்குமார் (வயது 24) என்ற மற்றொரு ராணுவவீரரையும் போலீசார் கைது செய்தனர். மாணவியை மீட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

Next Story