முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் 141.30 அடியாக குறைப்பு
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் நேற்று 141.30 அடியாக குறைக்கப்பட்டது. கேரளாவுக்கு உபரிநீர் திறக்கும் அளவு அதிகரிக்கப்பட்டு உள்ளது.
தேனி,
தமிழக-கேரள மாநில எல்லையில் அமைந்துள்ள முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் கடந்த 15-ந்தேதி 142 அடியை எட்டியது. இதையடுத்து வண்டிப்பெரியாறு வழியாக இடுக்கி அணைக்கு உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து நீர்வரத்து அதிக அளவில் இருந்ததால், நேற்று முன்தினம் அணையின் நீர்மட்டம் 142.80 அடியாக உயர்ந்தது.
அப்போது அணையின் நீர் இருப்பு 7 ஆயிரத்து 770 மில்லியன் கன அடியாக இருந்தது. கேரள மாநிலத்துக்கு உபரிநீராக வினாடிக்கு 21 ஆயிரம் கன அடி வீதம் வெளியேற்றப்பட்டது. தமிழகத்துக்கு ராட்சத குழாய்கள் வழியாகவும், இரைச்சல் பாலம் வழியாகவும் வினாடிக்கு 2 ஆயிரத்து 336 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது.
நேற்று முன்தினம் காலையில் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 25 ஆயிரத்து 732 அடியாக இருந்தது. நேற்று காலையில் நீர்வரத்து வினாடிக்கு 22 ஆயிரத்து 587 அடியாக குறைந்தது. இருப்பினும் அணையில் இருந்து நேற்று முன்தினம் இரவில் உபரிநீர் வெளியேற்றும் அளவு அதிகரிக்கப்பட்டது.
நீர்மட்டம் 142 அடியை கடந்ததால் அதை குறைக்கும் வகையில் அதிக அளவில் தண்ணீர் வெளியேற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், நேற்று காலையில் அணையின் நீர்மட்டம் 141.30 அடியாக குறைக்கப்பட்டது. அப்போது அணையில் இருந்து தமிழகத்துக்கு வினாடிக்கு 2 ஆயிரத்து 336 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. அதேநேரத்தில் கேரளாவுக்கு உபரிநீராக வினாடிக்கு 23 ஆயிரத்து 64 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டது.
உபரிநீர் திறக்கும் அளவு அதிகரிக்கப்பட்டதால் வண்டிப்பெரியாறு, சப்பாத்து போன்ற பகுதிகளில் ஆற்றுப் பாலத்தை மூழ்கடித்து தொடர்ந்து தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆற்றங்கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் 3-வது நாட்களாக பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அணைக்கு ஏற்பட்டுள்ள நீர்வரத்தை விட கூடுதல் தண்ணீர் வெளியேற்றப்படுவதால் நீர்மட்டம் குறையும் நிலை ஏற்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story