லால்குடி அருகே கொள்ளிடம் ஆற்றின் வெள்ளம் வயல்களில் புகுந்தது


லால்குடி அருகே கொள்ளிடம் ஆற்றின் வெள்ளம் வயல்களில் புகுந்தது
x
தினத்தந்தி 18 Aug 2018 3:00 AM IST (Updated: 18 Aug 2018 12:05 AM IST)
t-max-icont-min-icon

லால்குடி அருகே கொள்ளிடம் ஆற்றில் கரைபுரண்டு ஓடிய வெள்ளம் புகுந்ததால் ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த நெற்பயிர்கள், கரும்பு மற்றும் வாழைகள் தண்ணீரில் மூழ்கின.

லால்குடி,

திருச்சி மாவட்டம் லால்குடியை அடுத்த இடையாற்றுமங்கலம், கூகூர், அன்பில், செங்கரையூர், டி.கள்ளிக்குடி, கே.வி.பேட்டை, ஆலங்குடி மகாஜனம், நத்தம், நத்தமாங்குடி, திண்ணியம் ஆகிய கிராமங்கள் கொள்ளிடம் ஆற்றின் கரையோர பகுதியில் உள்ள கிராமங்கள் ஆகும். இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் பெய்த கன மழையின் காரணமாக காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்ட தண்ணீரால் திருச்சி மாவட்டம் முக்கொம்பில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் இரு கரைகளையும் தொட்டபடி வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.

இதனால் நத்தம், கே.வி.பேட்டை டி.கள்ளிக்குடி பகுதிகளில் கொள்ளிடம் கூழையாறு வடிகால் வழியாக சென்ற வெள்ளம் வயல் பகுதியில் புகுந்தது. இதன் காரணமாக இப்பகுதியில் சுமார் ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட வயல்களில் குருவை சாகுபடி செய்து கதிர் வந்த நிலையில் உள்ள நெற்பயிர்கள் மற்றும் கரும்பு, வாழை ஆகியவை தண்ணீரில் மூழ்கின. இதனால் வயல்கள் கடல் போல் காட்சியளிக்கிறது.

மேலும் கே.வி.பேட்டை, ஆலங்குடி மகாஜனம், நத்தம் கிராமங்களில் சுமார் 50-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால், அங்கு வசித்த பொதுமக்கள் அப்பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டனர்.

நத்தம் பகுதியில் இருந்து கல்லக்குடி பகுதிக்கு குடிநீருக்காக, கொள்ளிடம் ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்குழாய் கிணறுகளில் இருந்து மின் மோட்டார்கள் மூலம் நீரேற்றப்பட்டு குழாய்களில் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. தற்போது கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் மின் மோட்டார்கள் பாதிப்படைந்து, கல்லக்குடி பகுதிக்கு குடிநீர் கொண்டு செல்ல முடியாத நிலை உள்ளது.

வெள்ளம் புகுந்ததால் பாதிக்கப்பட்ட வயல்களையும், வீடுகளையும் லால்குடி கோட்டாட்சியர் பாலாஜி பார்வையிட்டார். அப்போது, வெள்ளநீர் சூழ்ந்த வீடுகளில் இருப்பவர்களை, அப்பகுதிகளில் உள்ள பள்ளிகளில் தங்க வைக்கவும், 24 மணி நேரமும் கிராம நிர்வாக அதிகாரிகள் கொள்ளிடம் கரையோர பகுதிகளை கண்காணித்து வர வேண்டும் என்றும் அவர்களுக்கு உத்தரவிட்டார்.

அப்போது லால்குடி தாசில்தார் ராகவன், வருவாய் ஆய்வாளர்கள் பாக்கியலெட்சுமி, சிவநேசன், கிராம நிர்வாக அதிகாரிகள் குணசேகரன், கவிமணி, ஞானசேகர் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Next Story