விளாத்திகுளம் அருகே கும்பாபிஷேகத்துக்கு சென்ற அர்ச்சகர் மின்சாரம் தாக்கி பலி


விளாத்திகுளம் அருகே கும்பாபிஷேகத்துக்கு சென்ற அர்ச்சகர் மின்சாரம் தாக்கி பலி
x
தினத்தந்தி 18 Aug 2018 2:30 AM IST (Updated: 18 Aug 2018 12:45 AM IST)
t-max-icont-min-icon

விளாத்திகுளம் அருகே கும்பாபிஷேகம் நடத்த சென்ற அர்ச்சகர் யாகசாலை பூஜைக்காக கோவிலில் நடந்து சென்றபோது மின்வயரை மிதித்ததால் மின்சாரம் தாக்கி பலியானார்.

விளாத்திகுளம், 

விளாத்திகுளம் அருகே கும்பாபிஷேகம் நடத்த சென்ற அர்ச்சகர் யாகசாலை பூஜைக்காக கோவிலில் நடந்து சென்றபோது மின்வயரை மிதித்ததால் மின்சாரம் தாக்கி பலியானார்.

கோவில் அர்ச்சகர்

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சன்னதி தெருவைச் சேர்ந்தவர் சங்கர நாராயணன். இவருடைய மகன் வெங்கடேஷ் (வயது 20). இவர் பிளஸ்-2 படித்து விட்டு, விளாத்திகுளம் பஸ் நிலையம் அருகில் உள்ள பிள்ளையார் கோவிலில் அர்ச்சகராக இருந்து வந்தார்.

விளாத்திகுளம் அருகே நெடுங்குளம் பஞ்சாயத்து துவரந்தை காளி அம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா கடந்த 2 நாட்கள் நடந்தது. இதையொட்டி அங்கு கும்பாபிஷேகம் நடத்துவதற்காக வெங்கடேஷ் சென்றார். நேற்று முன்தினம் இரவில் கோவிலில் யாகசாலை பூஜை நடத்துவதற்காக, கோவில் வளாகத்தில் வெங்கடேஷ் நடந்து சென்றார்.

மின்சாரம் தாக்கி...

அப்போது அங்கு கிடந்த மின் ஒயரை எதிர்பாராதவிதமாக அவர் மிதித்து விட்டார். அப்போது அதன் வழியாக மின்கசிவு ஏற்பட்டு மின்சாரம் பாய்ந்ததில், அவர் தூக்கி வீசப்பட்டார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் உயிருக்கு போராடியவாறு கிடந்தார். உடனே அவரை சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து சூரங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த சென்ற அர்ச்சகர், மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இதற்கிடையில் நேற்று காலையில் மாற்று ஏற்பாடு செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.

Next Story