குடிசை மாற்று வாரியத்தில் வீடு: அ.தி.மு.க. முன்னாள் பெண் கவுன்சிலர் மீது மோசடி புகார்
குடிசை மாற்று வாரியத்தில் வீடு வாங்கி தருவதாக அ.தி.மு.க. முன்னாள் பெண் கவுன்சிலர் மீது மோசடி புகார் தெரிவித்து மீனவர்கள் முற்றுகையிட்டனர்.
திருவொற்றியூர்,
சென்னை காசிமேடு பகுதியை சேர்ந்தவர் சசிகலா நாகலிங்கம். சென்னை மாநகராட்சி 39-வது வார்டு அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலரான இவர், காசிமேடு பகுதியில் உள்ள மீனவர்களிடம் குடிசை மாற்று வாரியத்தில் வீடுகள் வாங்கி தருவதாக கூறி ரூ.1 லட்சம், ரூ.50 ஆயிரம், ரூ.20 ஆயிரம் என ரூ.2 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக கூறப்படுகிறது.
ஆனால் அவர், 7 ஆண்டுகள் ஆகியும் சொன்னபடி மீனவர்களுக்கு குடிசை மாற்று வாரியத்தில் வீடுகள் வாங்கி தரவில்லை எனவும், இதனால் தாங்கள் கொடுத்த பணத்தை திரும்ப தரும்படி கேட்ட மீனவர்களை அவர் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட மீனவர்கள், இதுபற்றி பலமுறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் தெரிகிறது. இதையடுத்து மோசடியில் ஈடுபட்ட அ.தி.மு.க. முன்னாள் பெண் கவுன்சிலர் சசிகலா நாகலிங்கத்தின் மீது நடவடிக்கை எடுத்து, தங்கள் பணத்தை மீட்டுத்தரவேண்டும் என வலியுறுத்தி காசிமேடு மீன்பிடி துறைமுக போலீஸ் நிலையத்தில் நேற்று ஏராளமான பெண்கள் உள்பட மீனவர்கள் முற்றுகையிட்டனர்.
அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார், இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதை ஏற்று முற்றுகையை கைவிட்டு பெண்கள் உள்பட மீனவர்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story