மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை: களக்காடு தலையணையில் வெள்ளப்பெருக்கு
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை பெய்து வருவதால் களக்காடு தலையணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.
களக்காடு,
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை பெய்து வருவதால் களக்காடு தலையணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் அங்கு சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறை அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.
தொடர் மழை
நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் பாபநாசம், சேர்வலாறு, ராமநதி, கடனா நதி அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. அணையில் இருந்து தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. இதனால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதேபோல் களக்காடு- முண்டந்துறை புலிகள் காப்பக பகுதியிலும் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இதனால் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
தலையணையில் வெள்ளப்பெருக்கு
களக்காட்டிற்கு மேலே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள சுற்றுலா தலமான தலையணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. தலையணை பகுதிக்கு குளிக்க செல்ல சுற்றுலா பயணிகள் உள்பட அனைவருக்கும் வனத்துறையினர் தடைவிதித்து அங்குள்ள கேட்டை பூட்டி போட்டு உள்ளனர்.
நேற்று விடுமுறை நாள் என்பதால் பலர் தங்களது குடும்பத்தோடு அங்கு செல்ல வேன், கார்களில் வந்தனர். அங்கு கேட் பூட்டப்பட்டு உள்ளதால் தலையணைக்கு செல்லமுடியாமல் சுற்றுலா பயணிகள் பெரும் அவதிக்கு உள்ளானார்கள்.
தேங்காய் உருளி அருவி
தலையணைக்கு வந்த சுற்றுலா பயணிகள் அங்கிருந்து மஞ்சுவிளை வழியாக வடக்குபச்சையாறு அணை அருகில் உள்ள தேங்காய் உருளி அருவிக்கு வந்து ஆனந்த குளியல் போட்டு சென்றனர். இதனால் நேற்று வடக்குபச்சையாறு அணைப்பகுதியில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
Related Tags :
Next Story